திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு மலைப்பாதையில் ஹெல்மெட் இல்லாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அனுமதி இல்லை என்று விஜிலன்ஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். இவர்கள் பேருந்து, ரயில், கார், பைக் போன்ற வாகனங்களில் வருகின்றனர். இந்நிலையில், ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பைக்கில் வரும் பக்தர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அதேபோல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என கூறியுள்ள அவர்கள், லைசென்ஸ், ஹெல்மெட் இல்லாமல் வருபவர்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளனர். இவை இரண்டும் இல்லாமல் வருவோர் அலிபிரியில் உள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் பைக்கை நிறுத்திவிட்டு பஸ்சில்தான் செல்ல வேண்டும் என்று தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதற்கான அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது.