குடியுரிமை திருத்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல – அமித்ஷா

மக்களவையை போன்று கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மாநிலங்களவையிலும் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேறியது.

நாடாளுமன்ற மக்களவையில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடியுரிமை திருத்த மசோதா கடந்த 9-ந் தேதி நிறைவேறியது. இந்த மசோதாவானது, மத ரீதியில் துன்புறுத்தலுக்கு ஆளாகி, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து வெளியேறி, 2014-ம் ஆண்டு வரையில் இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதற்கு வகை செய்துள்ளது.
இந்த நிலையில் மாநிலங்களவையிலும் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தாக்கல் செய்து பேசினார். அப்போது பேசிய அவர், இந்த மசோதா, இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிரானது என்ற தவறான கருத்து பரப்பப்பட்டுள்ளது என்றும், இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் இந்தியர்களாக இருந்தனர், இந்தியர்களாக இருக்கின்றனர், இந்தியர்களாக தொடருவர், அவர்களுக்கு எதிராக பாகுபாடு இல்லை என்றும் தெரிவித்தார்.

Exit mobile version