குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது

பாஜக ஆட்சியில், சிக்கலான பல சட்டங்கள், மிகவும் எளிதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. 2020 -21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். இந்தாண்டின், முதல் கூட்டத் தொடர் என்பதால், குடியரசுத் தலைவரின் உரையுடன் கூட்டத் தொடர் தொடங்கியது.

 இதற்காக, குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து குதிரைப்படை அணிவகுப்புடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். நாடாளுமன்ற வளாகத்தில் அவரை பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் வரவேற்றனர்.

இதனை அடுத்து, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அடுத்த 10 ஆண்டுகள் இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது என்றும், காந்தி மற்றும் நேருவின் கனவுகளை நனவாக்கப் போவது இந்த 10 ஆண்டுகள்தான் எனவும் கூறினார். அயோத்தி தீர்ப்பை மக்கள் முழு மனதுடன் வரவேற்றதாக குறிப்பிட்ட அவர், மத்திய அரசு, பெண்களுக்கும், ஏழைகளுக்கும் பல நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.

சிக்கலான பல சட்டங்கள், மிகவும் எளிதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டுள்ளது என்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் சிறுபான்மையினர் நசுக்கப்படுவதால் குடியுரிமை திருத்த சட்டம் அவசியம் என தெரிவித்த அவர், எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவதால் ஜனநாயகத்துக்குத்தான் பாதிப்பு என்றும் குறிப்பிட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டதால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், விவசாயிகளை பாராட்டி திருக்குறளை மேற்கோள் காட்டினார்.தொடர்ந்து பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சர்வதேச அளவில் பொருளாதாரம் மந்த நிலையாக இருந்தாலும், இந்திய பொருளாதாரம் வலுவுடன் இருப்பதாக தெரிவித்தார்.

Exit mobile version