உத்தர பிரதேசத்தில் காவல்துறை அதிகாரி ஒருவரை பாஜக பிரமுகர் தாக்கிய வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.
உத்தர பிரதேச மாநிலம் கங்கர்கேதா பகுதியில் மணீஷ் என்ற பாஜக கவுன்சிலருக்கு சொந்தமாக ஓட்டல் ஒன்று உள்ளது. அங்கு பெண் வழக்கறிஞர் ஒருவருடன் காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் சாப்பிட வந்தார்.
அப்போது உணவு பரிமாறுபவருக்கும் உதவி ஆய்வாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த பாஜக கவுன்சிலர் மணீஷ், அந்த காவல் உதவி ஆய்வாளரை ஆபாசமாக பேசி சரமாரியாகத் தாக்கத்தொடங்கினார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
இதற்கிடையே காவல் உதவி ஆய்வாளரை அடித்ததாக பாஜக கவுன்சிலர் மணீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில், காவல் உதவி ஆய்வாளரும், பெண் வழக்கறிஞரும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் தாக்கியதாக அவர் கூறியுள்ளார்.