உலகின் கடைசி பயணிப்புறா உயிரிழந்த நாள் செப்.1 – சிறப்புத் தொகுப்பு

17ஆம் நூற்றாண்டில் வட அமெரிக்காவில் 500 கோடி பயணிப் புறாக்கள் இருந்தன. 1914ஆம் ஆண்டில் இதே செப்டம்பர் 14ஆம் தேதி உலகின் கடைசி பயணிப் புறாவான மார்த்தா உயிரைவிட்டது. இந்தப் பறவை இனம் அழிய ஒரே காரணம் மனிதர்கள் மட்டும்தான்!. என்ன நடந்தது இவற்றுக்கு? – சிறப்பு தொகுப்பு

வட அமெரிக்காவில் வாழ்ந்த பயணிப் புறாக்கள் மிக அழகானவை. பறக்கும் போது இறகுகளோடு வாலையும் இவை விரித்துக் கொள்வதால் இவற்றின் பயணம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அழகைப் போல அமைதிக்கும், மென்மைக்கும் கூட இவை இலக்கணமாக இருந்தன.

பயணிப் புறாக்கள் எப்போதும் கூட்டமாக வாழக் கூடியவை, எனவே இவை இடம்பெயரும் போதும்கூட கூட்டமாகவே இடம்பெயரும். இதனால் பயணிப் புறாக்கள் வானத்தில் ஊர்வலம் போகும் போது சூரியனைக் கூட மக்களால் பார்க்க முடியாது. ஒரு வரலாற்றுக் குறிப்பு, 1873–ம் ஆண்டு ஏப்ரல் 8–ந் தேதி மெக்சிகன் நகரின் வானத்தில் காலை 7.30 மணிக்கு தொடங்கிய பயணிப் புறாக்களின் ஊர்வலம் முடிந்து வானம் தெரிவதற்கு மாலை 4.30 மணி ஆனது – என்று கூறுகின்றது.

பயணிப் புறாக்கள் மனிதர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை என்றாலும், அவற்றின் பயணத்தை மனிதர்கள் தொந்தரவாகப் பார்க்க ஆரம்பித்தனர். பயணிப் புறாக்கள் மென்மையானவை, எதிர்த்துத் தாக்காதவை – என்பதால் இவை வேட்டைக்காரர்களின் எளிய இலக்காகின.

வலைகள், கட்டைகள், துப்பாக்கிகள் – என அத்தனை முறைகளிலும் பயணிப் புறாக்கள் கொன்று குவிக்கப்பட்டன. பயணிப் புறாக் கூட்டத்தை நோக்கி துப்பாக்கியால் சுடும் போது, அந்த சத்தத்தால் இதயம் நின்று அவை கூட்டமாக இறந்தன – என்பதால் ஒவ்வொரு தோட்டாவும் நூற்றுக் கணக்கான பயணிப் புறாக்களைக் கொன்றது. 1884ஆம் ஆண்டில் மட்டும் 30 லட்சம் பயணிப் புறாக்களை அமெரிக்கர்கள் கொன்று குவித்தனர். இப்படியாக கொல்லப்பட்ட பயணிப் புறாக்கள் அமெரிக்க மக்களின் மலிவு விலை இறைச்சியாகின.

பயணிப் புறாக்கள் ஆண்டுக்கு ஒரு முட்டை மட்டுமே இடக் கூடியவை. இதனால் இவற்றினால் அழிவில் இருந்து மீள முடியவில்லை. இதனால் 20ஆம் நூற்றாண்டு பிறந்தபோது,  வானத்தில் பயணிப் புறாக்களைக் காணவே முடியவில்லை. அமெரிக்க மக்கள் அவற்றை உயிரியல் பூங்காக்களில் மட்டுமே கண்டனர். மீண்டும் அவற்றைப் பெருக்க மேற்கொண்ட திட்டங்கள் தோல்வி அடைந்த நிலையில், அமெரிக்காவின் சின்சினாட்டி உயிரியல் பூங்காவில் 1914 செப்டம்பர் 1–ந் தேதி மதியம் ஒரு மணிக்கு உலகின் கடைசி பயணிப் புறாவான மார்த்தா உயிரிழந்ததோடு பயணிப் புறாக்களின் வரலாறு முடிவுக்கு வந்தது. 

மனிதர்கள் பிற உயிர்களுக்குச் செய்த அழிவுக் காரியங்களில் எல்லாம் மிகப் பெரியது – என்று பயணிப் புறாக்களின் அழிவை வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்கின்றனர். எனவே இந்த நாள் மனித வரலாற்றின் மாபெரும் கறுப்புப் புள்ளி – என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

Exit mobile version