14ஆம் ஆண்டு நினைவு தினம்… 2004ஆம் ஆண்டு சுனாமியின் மறையாத வடுக்கள்…

தினமும் அலை ஓசையை கீதமாக ரசித்த கடலோர மக்களுக்கு, 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ந் தேதியை மறக்க முடியாத நாளாக அமைந்தது. ஆம் அன்று மட்டும் அவர்கள் கேட்டது கீதம் அல்ல, மரண ஓலம். அலைக்கு என்ன கோபம் வந்ததோ, கடலோர மக்களை கொத்து கொத்தாக பறித்துக் கொண்டது. தன் கோர முகத்தை காட்டி, மக்களின் மீளாத் துயரத்தில் ஆழ்த்தியது அந்த ஆழிப்பேரலை.

சுமத்திரா தீவின் வடமேற்கு கடற்கரையிலிருந்து 150 கி.மீ தொலைவில் ஆழ்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம், அனைவரது மனதிலும் அதிர்வை ஏற்படுத்தியது. ரிக்டர் அளவுக்கோலில் 9.3ஆக பதிவான இந்த நிலநடுக்கம் 2வது வலிமையான நிலநடுக்கம் ஆகும். இதனால் ஏற்பட்ட ஆழிப்பேரலை நகருக்குள் புகுந்து மக்களையும், மக்களின் உடமைகளையும் சூறையாடியது. மொத்தம் 14 நாடுகளை தாக்கியது இந்த ஆழிப்பேரலை.

ஆழிப்பேரலையின் இந்த ருத்திரதாண்டவத்திற்கு 2,30,000 பேர் பலியானார்கள். இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2,758 பேரும், புதுச்சேரியில் 377 பேரும் பலியாகினர். கடற்கரை முழுதும் பிண குவியலாக இருந்தது.

ஆழிப்பேரலையில் உறவுகளை இழந்த நெஞ்சங்களில் சோக அலைகள் இன்னும் ஓயாமல் ஓசையிட்டுக் கொண்டு தான் இருக்கிறது. ஓவ்வொரு ஆண்டும் இதே நாளில் கடற்கரைக்கு வந்து, இழந்த தன் உறவுகளை நினைத்து தங்களது கண்ணீரை அலைகளோடு மக்கள் காணிக்கையாக்குகின்றனர்.

எத்தனையோ நாட்கள் கடந்தாலும், இன்னும் கிழிக்கப்படாத காலண்டர் நாட்களாக நம் மனதில் அந்த நாள் உள்ளது. இனி இப்படியொரு அழிவு நாம் காணவே கூடாது. ஏய், இயற்கையே போதும், நீருக்கும் – நிலத்திற்கும் நீ ஏற்படுத்தும் வன்முறையை நிறுத்திக்கொள்.. மீண்டும் அலை ஓசையில் மரண ஓலத்தை கலக்காதே..

Exit mobile version