இளநீர் தட்டுப்பாடு காரணமாக அவற்றின் விலை உயர்ந்துள்ளதோடு ஏற்றுமதி செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் பிரதான விவசாயமாக விளங்குவது தென்னை சாகுபடியாகும், பொள்ளாச்சி பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பச்சை மற்றும் செவ்விள இளநீர் தமிழகம் மட்டுமில்லாமல் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்தநிலையில், நாளொன்றுக்கு 2 லட்சம் இளநீரை வியாபாரிகள் ஏற்றுமதி செய்து வந்தனர். போதுமான அளவு மழை பெய்யாத காரணத்தால் ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், சேர்த்துமடை மற்றும் கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளில் உள்ள தென்னை மரங்களில் இளநீர் காய்ப்பது குறைந்துள்ளது. இதனால், விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு இளநீர் 40 ரூபாயில் இருந்து 45 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் வெளிமாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.