சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் மாசிமக தெப்போற்சவம்

108 வைணவ தலங்களில் ஒன்றான திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் மாசிமக தெப்போற்சவத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. முப்பத்து முக்கோடி தேவர்களும் ஒன்று கூடியதால் இந்த ஊருக்கு திருக்கோஷ்டியூர் என பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசி தெப்ப உற்சவம் மிகவும் கோலாகலமாக நடைபெறும். இந்த உற்சவத்தில் லட்சக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வார்கள்.

இந்தநிலையில் இந்த ஆண்டு மாசி தெப்ப உற்சவம் கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவையொட்டி கடந்த 10 நாட்களாக தினமும் சிம்ம, அனுமன், கருட, ஷேச வாகனங்களில் சுவாமியின் வீதியுலா நடைபெற்றது.

விழாவின் பத்தாம் நாளான இன்று காலை தங்க தோளுக்கினியானின் திருவீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இதில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் சவுமிய நாராயண பெருமாள் எழுந்தருள்வார். நாளை தீர்த்தவாரியுடன் தெப்ப உற்சவம் நிறைவடையும்.

இந்த தெப்ப உற்சவத்தை காண சென்னை, கும்பகோணம், மயிலாடுதுறை, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருகோஷ்டியூருக்கு வருவார்கள் என்பதால் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் பாதுகாப்புப் பணியில் ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version