ஆந்திர மாநிலத்தில், மூன்று தலைநகர் திட்டத்தை எதிர்த்து ஆந்திர சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்ற, தெலுங்கு தேசம் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள அமராவதியை சட்டமன்ற தலைநகராகவும், விசாகப்பட்டினத்தை நிர்வாக தலைநகராகவும், கர்னூல் நகரை நீதித்துறை தலைநகராகவும் உருவாக்க ஜெகன் மோகன் ரெட்டி அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அமராவதியை உருவாக்க நிலம் கொடுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் 3 தலைநகர் திட்டத்திற்கான ஜெகன் மோகன் ரெட்டி மசோதாவை தாக்கல் செய்தார். இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை அறிவித்தன. இதனையடுத்து பல்வேறு பகுதிகளில் இருந்து சட்டமன்றம் நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தினர். அவர்களை தடுக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதில், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு நள்ளிரவில் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், போராட்டம் மேலும், தீவிரமடைய உள்ளதாக கூறப்படுகிறது. எத்தனை போராட்டங்கள் நடந்தாலும், 3 தலைநகர் உருவாக்குவதில், அரசு உறுதியாக உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.