உடல் உறுப்புகள் வடிவமைக்கப்பட்ட ஆடை அணிந்து பாடம் நடத்தும் ஸ்பெயின் ஆசிரியை

ஸ்பெயின் நாட்டில் ஒரு ஆசிரியை, மாணவர்களுக்கு அறிவியலைப் புரிய வைப்பதற்காக மேற்கொண்டு வரும் புதிய கற்பித்தல் முயற்சிகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

வெரோனிகா டுகியூ என்பவர் ஸ்பெயின் நாட்டில் கடந்த 15 ஆண்டுகளாக ஆசிரியையாகப் பணியாற்றி வருகின்றார். புதிய கல்விமுறைகள் மூலம் மாணவர்களுக்கான கற்பித்தலை எளிமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உடைய இவர் அதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ‘பாடங்கள் புரியவில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்பதுதான் இவரது தாரக மந்திரம்.

எப்போதும் மாணவர்களுக்கு மிகக் கடினமாக உள்ள பாடங்களில் ஒன்று உயிரியல்… உயிரியல் பாடத்தை தனது மாணவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, மனித உடல் உறுப்புகளின் படங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்து கொண்டு மாணவர்களுக்கு இவர் பாடம் நடத்தி உள்ளார். இதன் மூலம் மனித உடல் குறித்த புரிதலை மிக எளிதான முறையில் தனது மாணவர்களுக்கு இவர் ஏற்படுத்தி உள்ளார்.

ஆசிரியை வெரோனிகா டுகியூ-வின் நடவடிக்கைகளைக் கண்டு வியந்த அவரது கணவர் மைக்கேல், தனது மனைவி பாடம் நடத்தும் முறையைப் புகைப்படங்களாக எடுத்து ’எனது மனைவியின் கற்பித்தல் நடவடிக்கைகளைக் கண்டு பிரமிக்கிறேன்’ என்ற தலைப்பில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார். இந்தப் புகைப்படங்கள்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் உலக அளவில் வைரலாகி வருகின்றன.  

ஆசிரியை வெரோனிகா டுகியூ-வின் முயற்சிகளைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Exit mobile version