5000 ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிய டாட்டூ கலாச்சாரம்: சிறப்பு தொகுப்பு

பெயர்களை பச்சைக்குத்திய காலம் போய், ஃபேஷனுக்காகவும், தங்கள் உள்ளுணர்வை வெளிப்படுத்துவதற்காகவும், உடல் முழுவதும் டாட்டூக்களை குத்திக்கொள்ளும் காலத்தில் இருக்கிறோம். இப்படி பலராலும் நேசிக்கப்படும் டாட்டூக்கள் குறித்த ஒரு சிறப்பு தொகுப்பினை பார்க்கலாம்.

2015 ஆம் ஆண்டு ஆல்ப்ஸ் மலைத்தொடரில் கண்டுபிடிக்கப்பட்ட ஓட்ஸி, என்னும் மம்மியின் உடலில் 61 டாட்டூக்கள் இருப்பது தெரியவந்தது. அந்த உடல் கிட்டத்தட்ட 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்டிருக்கும் என்று கூறுகின்றனர் ஆய்வாளர்கள். அதன்படி பார்த்தோம் என்றால், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பச்சைக்குத்தும் கலாச்சாரம் இருந்துள்ளது. எழுத்துகள், பெயர்கள், மத குறியீடுகள் உள்ளிட்டவையே ஆரம்ப காலத்தில் பெரும்பாலானோரால் பச்சையாக குத்திக்கொள்ளப்பட்டது. பின்னாளில் படிப்படியாக உருபெற்று எந்த வடிவங்களில் வேண்டுமானாலும் டாட்டூ குத்திக்கொள்ளலாம் என்னும் நிலை வந்துவிட்டது.

டாட்டூக்களில் Traditional, Realism, Watercolor என பல வகைகள் உள்ளன. இப்படி விதவிதமான டாட்டூக்களை வரைவதற்கென்றே பலவகையான மைகளும் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு நபர் முழுமையான டாட்டூ கலைஞராக மாறவேண்டும் என்றால், பல மாதகால பயிற்சி அவசியம் எனக் கூறுகின்றனர் துறை சார்ந்தவர்கள்.

டாட்டூ தொழில், கலை ஆர்வம் கொண்ட இளைஞர்கள் பலரின் விருப்பமாக மாறியுள்ளது. வெவ்வேறு படிப்புகளை முடித்த இளைஞர்களும், பெண்களும் கூட டாட்டூ மீது உள்ள ஆர்வத்தினால் அதற்கான பயிற்சியை எடுத்து வருகின்றனர். டாட்டூக்கள் மீது இளைஞர்களுக்கு மட்டுமே அலாதி பிரியம் இருந்த காலக்கட்டம் போய், தற்போது முதியோர்களும் தங்கள் உடலில் டாட்டூக்களை ஆர்வமுடன் வரைந்துகொள்கின்றனர்.

டாட்டூக்களை ஆர்வமிகுதியில் உடலில் வரைந்துவிட்டு, பின்நாளில் அதை அழிக்கப் பாடுபடுவோர் ஏராளம். ஆகையால் ஒரு டாட்டூவை வரைவதற்கு முன்னர் பலமுறை யோசிப்பது நல்லது. அதேபோல் சுகாதாரமில்லாத கருவிகள் மூலம் டாட்டூக்களை போடுவது சருமத்தில் பல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். முறையாக பயிற்சி பெற்று கைதேர்ந்தவர்களிடம் டாட்டூக்களை வரைந்துகொள்வதே பாதுகாப்பானது.

வயது வரம்பில்லாமல் அனைவராலும் ரசிக்கப்படும் டாட்டூக்களை, முழுமையாக ஆராய்ந்த பின்பு வரைந்துகொண்டால், வாழ்நாள் முழுவதும் நம் சருமத்தை அழகுடன் காட்சிப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

Exit mobile version