தமிழகத்தில் மண் மற்றும் நிலச்சரிவு சம்பவங்கள் அதிகம் நிகழும் நீலகிரி மாவட்டத்தில் பேரிடர் காலத்தில் மேற்கொள்ளவேண்டிய பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை குழு மற்றும் தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்பு குழு சார்பில், உதகை அருகேயுள்ள பாலாடாவில் மாதிரி ஒத்திகை பயிற்சி இன்று நடைபெற்றது.
அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழு பார்வையாளர் கெளசால் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.பி.அம்ரித் தொடங்கி வைத்தார். நீலகிரி மாவட்டத்தில் மழையால் அதிகளவு பாதிக்கப்படும் பாலாடா, முள்ளிகூர், குன்னூர் நகரம், கோத்தகிரி கன்னிகாதேவி நகர், மேல் கூடலூர் ஆகிய இடங்களில் இந்த ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நீலகிரி மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அம்ரித் செய்தியாளர்களிடம் பேசுகையில், நிலச்சரிவு ஏற்படும் போது மேற்கொள்ளவேண்டிய பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், முன்னெச்சரிக்கையை அறிவிப்பது, தேடுதல் மற்றும் மீட்பு பணியை மேற்கொள்வது, பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது, தற்காலிக முகாம் அமைத்து தங்க வைப்பது, முதலுதவி மற்றும் மருத்துவ பரிசோதனை அளிப்பது குறித்தும் விரிவான செயல்முறை விளக்கங்கள் மற்றும் விழிப்புணர்வுகள் பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டதாகக் கூறினார்.
மேலும் மாவட்டத்தில் ஐந்து இடங்களில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில் அனைத்துத் துறை அலுவலர்கள், உள்ளூர் பொதுமக்கள், முதல் நிலை பொறுப்பாளர்கள் பங்கேற்றதாகவும் அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய அரக்கோணம் பேரிடர் மீட்பு குழு பார்வையாளர் கௌசால், நீலகிரி மாவட்டத்தில் இன்றைய பேரிடர் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடத்தப்பட்டதாகவும், இதன் மூலம் பேரிடர் காலங்களில் இழப்புகளை தவிர்ப்பதோடு சிறப்பாக பணியாற்ற முடியும் என்றும் கூறினார்.