தமிழகத்தில்தான் அதிகளவில் மருத்துவக்கல்லூரிகள் உள்ளன: முதலமைச்சர் பழனிசாமி

நாமக்கலில் புதிதாக கட்டப்படும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில்தான் அதிகளவில் மருத்துவக்கல்லூரிகள் இருப்பதாக தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 117 கோடி ரூபாய் மதிப்பில் அரசு மருத்துவக்கல்லூரியும், 157 கோடி ரூபாய் செலவில் மருத்துவமனையும் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஷ்வினி குமார் சவுபே, தமிழக அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் தான் அதிகளவில் மருத்துவக்கல்லூரிகள் உள்ளதாகவும், தற்போது புதிதாக தொடங்கப்படும் 11 மருத்துவக்கல்லூரிகள் மூலம் ஆயிரத்து 650 மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கதவணை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என கூறிய அவர்,  நாமக்கல் மாவட்டத்தில் திருமணிமுத்தாறு – காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.

Exit mobile version