தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 91.
நாமக்கல் மாவட்டம் சிவியாம்பாளையத்தில் 1928ம் ஆண்டு செப்டம்பர் 24 ஆண்டு சிலம்பொலி செல்லப்பன் பிறந்தார். கணித ஆசிரியராக தனது பணியை தொடங்கிய அவர், சிலம்பொலி, பெருங்கதை ஆராய்ச்சி, சங்க இலக்கிய தேன் உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக சிலப்பதிகாரத்தை பட்டித்தொட்டியெங்கும் பரப்பிய என்ற பெருமையை சிலம்பொலி செல்லப்பன் பெற்றார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட அணிந்துரைகளை எழுதியுள்ள சிலம்பொலி செல்லப்பன், இவர் எழுதிய ”சிலம்பொலியாரின் அணிந்துரைகள்” எனும் நூல் தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருதை பெற்றுள்ளது. உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர், உலக தமிழ் மாநாட்டு உதவி அலுவலர் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராக இருந்து ஓய்வு பெற்ற இவர், வயது மூப்பு காரணமாக சென்னை திருவான்மியூரில் உள்ள இல்லத்தில் இன்று காலமானார்.