திரைத்துறையில் பெண்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் டி.பி.ராஜலட்சுமி

திரைத் துறையில் சாதனை படைக்க நினைக்கும் பெண்களுக்கு உந்து சக்தியாகத் திகழ்கிறார் டி.பி.ராஜலட்சுமி. ஆண்களுக்கு நிகர் பெண்கள் என எல்லாத்துறைகளிலும் சாதித்து வருகின்றனர் பெண்கள். ஆனால் திரைத்துறையில் மட்டும் பெண்கள் பற்றிய பார்வை கவர்ச்சியாகவும், தவறாகவும் விமர்சிக்கப்படுகிறது. இதனால் பெண்கள் திரைத்துறையில் கவனம் செலுத்தச் சற்றுத் தயக்கம் காட்டி வருகின்றனர். ஆனால் அந்தக் காலத்திலையே விமர்சனங்களை எல்லாம் கடந்து முதல் பெண் இயக்குநராகவும், முதல் பேசும்படம் கதாநாயகியாகவும் வலம்வந்தவர் தான் டி.பி ராஜலட்சுமி.

ஆம். பலருக்கும் தெரியாத டி.பி ராஜலட்சுமிதான் தமிழகத்தின் முதல் பேசும் மற்றும் பேசாப் படங்களின் கதாநாயகி. கதாநாயகி மட்டுமா? தமிழ்த் திரையுலகின் முதல் பெண் இயக்குநரும் இவரே….

தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்ட டி.பி.ராஜலட்சுமியைக் குடும்ப வறுமையின் காரணமாக எட்டாவது வயதில் திருமணம் செய்து கொடுத்தனர். வரதட்சணைக் கொடுமையால் கணவனைப் பிரிந்து தாய் வீட்டிற்கே வந்து சேர்ந்தார். தந்தை உடல்நலப் பாதிப்பால் இறக்க டி.பி ராஜலட்சுமி அவரது தாயுடன் திருச்சிக்குக் குடிபெயர்ந்தார்.

சிறுவயதில் வறுமையின் காரணமாக நாடகக் கம்பெனியில் நாடகம் நடிக்கத் தொடங்கினார் டி.பி.ராஜலட்சுமி. பர்மா, இலங்கை எனப் பல்வேறு நாடுகளுக்குச் சென்று நாடகங்கள் நடித்து வந்தார். பிறகு 1917 ஆம் ஆண்டில் பேசாப்படமான கீசகவதம் என்கிற படத்தில் அறிமுகமான ராஜலட்சுமி 1943 வரை 14 படங்களில் நடித்துள்ளார். 1931 ஆம் ஆண்டில் முதல் பேசும்படமான காளிதாஸ் படத்தில் நடிகையாக நடித்தார்.

தனது வறுமையைக் கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து சாதனை படைத்துக் கொண்டே சென்றார். அதன் உச்சக்கட்டமாகப் பல்வேறு விமர்சனங்களையும் கடந்து 1936 ஆம் ஆண்டில் ஸ்ரீ ராஜம் டாக்கீசு என்னும் நிறுவனத்தை நிறுவி அதில் மிஸ் கமலா என்னும் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் தமிழக அளவில் பெண்ணால் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் ஆகும். இப்படம் தோல்வியைத் தழுவினாலும் அவர் அயராது ஓடிக்கொண்டே இருந்தார். 1938 ஆம் ஆண்டு மதுரை வீரன் படத்தை இயக்கினார். பல தடைகளை எல்லாம் கடந்து 1961 ஆம் ஆண்டு கலைமாமணி விருது பெற்றார். 1964 ஆம் ஆண்டு அவர் மறைந்தாலும் இன்று வரையிலும் திரைத்துறையில் பெண்களின் முன்னோடியாகவே திகழ்கிறார்.

Exit mobile version