மின்சார கார்கள் இயங்கும் போது, டயர்களின் சுழற்சியைக் கொண்டு மின்சாரம் தயாரித்து, கார் செல்லும் தூரத்தை அதிகரிக்க உதவும் ‘எனர்ஜி ஹார்வெஸ்டர்’ என்ற ஒரு புதிய சாதனம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
உலகெங்கும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களே பார்க்கப்படுகின்றன. இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இன்னும் சில ஆண்டுகளில் முழுதும் மின்சார வாகனங்களுக்கு மாறத் திட்டமிட்டு உள்ளன. இந்த மாற்றத்திற்கு மிகப் பெரிய சவாலாக இருப்பது பேட்டரிகளின் மின்சார கொள்ளளவுதான். ஒருமுறை மின்சாரம் ஏற்றினால் 500 கிலோ மீட்டர்களாவது போகக் கூடிய, அதே சமயம் விலையும் கட்டுப்படியாகக் கூடிய வாகனங்களே சந்தையின் தேவைகளாக உள்ளன.
இந்நிலையில், பேட்டரியின் செயல்திறனை அதிகரிக்காமலேயே, கார் செல்லும் தூரத்தை அதிகரிக்க ஜப்பானைச் சேர்ந்த சுமிடோமோ நிறுவனம் தற்போது ஒரு சாதனத்தைக் கண்டறிந்து உள்ளது. இந்த சாதனத்தை மின்சார வாகனங்களின் டயரின் உள்ளே பொருத்தும் போது, டயர் சுற்றும் போது ஏற்படும் உராய்வில் இருந்து இது மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றது. இதற்கு ‘ஆற்றல் சேகரிப்பான் என்று பொருள்படும் ‘எனர்ஜி ஹார்வெஸ்டர்’ என்று சுமிடோமோ பெயரிட்டு உள்ளது.
முன்னர் சைக்கிள்களில் டைனமோவைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரித்ததைப் போன்றதுதான் இந்தத் திட்டமும். ஆனால் காரின் சக்கரம் வேகமாக சுழலக் கூடியது என்பதால், அதன் பக்கவாட்டில் எந்த சாதனத்தையும் பொருத்த முடியாது. எனவே இந்த எனர்ஜி ஹார்வெஸ்டர் டயரின் உள் பகுதியில் பொருத்தப்படுமாறு வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த சுமிடோமோ எனர்ஜி ஹார்வெஸ்டரின் உள்ளே இரண்டு அடுக்கு ரப்பர் பகுதிகள் ஒன்றை ஒன்று பார்த்தபடி உள்ளன, இவை ஒவ்வொன்றின் மேலும் ஒருமின் முனையும் ஃபிலிமும் அடுக்குகளாக உள்ளன.
கார் ஓடும் போது ஏற்படும் உராய்வால் எனர்ஜி ஹார்வெஸ்டர் அதிர்வுகளை சந்திக்கும், அப்போது அதன் உள்ளே உள்ள ரப்பர் பகுதிகளும் அதிரும், அந்நிலையில் இரண்டு அடுக்குகளிலும் உள்ள ஃபிலிம்கள் ஒன்றுடன் ஒன்று உரசி, அதில் இருந்து மின்சாரம் உருவாகும். இந்த மின்சாரம் மின்முனைகள் மூலம் வெளியே எடுக்கப்பட்டு காரின் பேட்டரிக்கு அனுப்பப்படும்.
இப்படியாகக் கிடைக்கும் மின்சாரம் காரை இயக்கத் தேவைப்படும் மொத்த மின்சாரத்தின் அளவில் மிகக் குறைவான பங்கையே கொண்டிருக்கும் என்றாலும், இதனால் கார் செல்லும் தூரத்தைக் கொஞ்சமாவது அதிகரிக்க முடியும். சுமிடோமோ நிறுவனம் தனது கிளை நிறுவனமான ஃபால்கன் நிறுவனத்தின் டயருக்கு ஏற்றபடி முதல் எனர்ஜி ஹார்வெஸ்டரை வடிவமைத்து இருந்தாலும், இது அனைத்து டயர்களுக்கும் பொருந்தும் தொழில்நுட்பம் என்றே கூறப்பட்டு உள்ளது.
ஜப்பானின் ‘அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முகமை’ தனது ஆய்வுக்காக இந்த எனர்ஜி ஹார்வெஸ்டரை சமீபத்தில் தேர்வு செய்துள்ளதால் இன்னும் மேம்பட்ட எனர்ஜி ஹார்வெஸ்டர்கள் கார் சந்தைகளுக்குக் கிடைக்கலாம். ஆனால் இந்தத் தொழில் நுட்பம் மக்களை அடைய இன்னும் சில ஆண்டுகளாவது ஆகும்.