மலேசியாவிலுள்ள போர்னியோ தீவில் வாழ்ந்து வந்த 25 வயதான சுமத்ரான் வகை பெண் காண்டாமிருகம் கடந்த வாரம் உயிரிழந்தது. இதன் மூலம், சுமத்ரான் வகை காண்டாமிருக இனம் தங்களது நாட்டில் முற்றிலும் அழிந்துவிட்டதாக மலேசிய வனத் துறை தெரிவித்துள்ளது.
ஒரு காலத்தில் ஆசியக் கண்டம் முழுவதும் பரந்து காணப்பட்ட சுமத்ரான் காண்டாமிருகத்தின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், தற்போது வெறும் 100 மட்டுமே வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இது அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினமாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில் மலேசியாவில் கடைசியாக இருந்த இமான் என்ற பெயரைக் கொண்ட சுமத்ரான் இனக் காண்டாமிருகம், சனிக்கிழமை மாலை உயிரிழந்ததாக மலேசிய வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமத்ரான் வகை காண்டாமிருகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மலேசிய வனத்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் சரியான அளவில் பயனளிக்கவில்லை. உலகிலுள்ள ஐந்து வகை காண்டாமிருகங்களில் இரண்டு ஆப்பிரிக்காவிலும், மூன்று ஆசியாவிலும் உள்ளன. ஆசியாவில் காணப்படும் காண்டாமிருகங்களில் சுமத்ரானும், மிகச் சிறிய வகையைச் சேர்ந்த டைசரோஹினஸ் சுமத்ரான்சும் அடக்கம். சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துபோன, கம்பளி போன்ற உரோம அமைப்பைக் கொண்ட காண்டாமிருகத்துக்கும் இவற்றிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாகக் கூறுகின்றனர் ஆய்வாளர்கள். தற்போது 100க்கும் குறைவான சுமத்ரான் ரக காண்டாமிருகங்களே உலகில் உள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை இந்தோனேசியாவிலுள்ள சுமத்ரா தீவுகளில் வாழ்ந்து வருகின்றன. தற்போது மலேசியாவில் இருந்த கடைசி கடைசி ஆண் சுமத்ரான் காண்டாமிருகம் கடந்த மே மாதத்தில் இறந்து போனது. இந்நிலையில் கடைசி பெண் காண்டாமிருகம் இறந்துள்ளதாக மலேசிய வனத்துறை அறிவித்துள்ளது.
பருவநிலை மாற்றமும், காடுகள் அழிப்பும் சுமத்ரான் காண்டாமிருக இனத்தை அச்சுறுத்தி வருகின்றன. இதே நிலை தொடர்ந்தால் எஞ்சியிருக்கும் இனமும் அழிந்து போகும் என எச்சரிக்கின்றனர் வன உயிரின ஆர்வலர்கள்.