மின்சார ரயில்களில் உள்ளதுபோல் சென்னை மாநகரப் பேருந்துகளிலும் பேருந்து நிறுத்தத்தை முன்கூட்டியே அறிவிக்கும் கருவியைத் தமிழகப் போக்குவரத்துத் துறை அறிமுகப்படுத்தியுள்ளதற்குச் சென்னை மக்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து நெரிசல் மட்டுமின்றி மக்கள் தொகை அடர்த்தியும் அதிகம் உள்ள மாநகரம் சென்னை. சென்னை மாநகரின் மக்கள் தொகை 80 லட்சம் என்றால், மேலும் 5 லட்சம் பேர் நாள்தோறும் சென்னைக்கு வந்து செல்கின்றனர். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணச்சீட்டு கட்டணம் மிகவும் குறைவுதான். இதுவே சென்னை வாசிகள் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து பணி நிமித்தமாகச் சென்னைக்கு வருபவர்கள் மாநகரப் பேருந்துகளில் பயணிக்க முக்கியக் காரணமாக உள்ளது.
பேருந்தில் பயணிக்கும்போது தங்கள் நிறுத்தம் வந்துவிட்டதா என்று தெரியாமல் தவிப்பவர்களுக்கு, மின்சார ரயில்களில் உள்ளது போன்றே, பேருந்து நிறுத்தத்தை முன்கூட்டியே அறிவிக்கும் கருவியைத் தற்போது சென்னை மாநகரப் பேருந்துகளிலும் அறிமுகப்படுத்தியுள்ளது தமிழகப் போக்குவரத்துத் துறை.
ஒவ்வொரு பேருந்து நிறுத்தம் வருவதற்கும் சற்றுத் தொலைவுக்கு முன்பே, “பயணிகளின் கனிவான கவனத்துக்கு” என்ற மெல்லிய குரலுடன், அந்த நிறுத்தத்துக்கான அறிவிப்பு ஒலிக்கிறது.
பயணிகளுக்கான பேருந்து நிறுத்தம் வரும்போது நடத்துநரும் அவ்வப்போது நிறுத்தத்தை அறிவிப்பது வழக்கம்தான். இறங்க வேண்டிய நிறுத்தம் எப்போது வரும் என்பது தெரியாமல் தவிக்கும் பயணிகளுக்கு, இதுபோன்ற ஒரு திட்டம் கொண்டுவரப்படும் என்று போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கையின்போது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார்.
அதன்படி மதுரை மாநகரில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது சென்னை மாநகரப் பேருந்துகளிலும் நிறுத்தத்தை முன்கூட்டியே அறிவிக்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்குச் சென்னை மக்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தற்போது, சென்னை மாநகரில் ஒருசில வழித்தடங்களில் செல்லும் சொகுசு பேருந்துகளில் மட்டும் முதல்கட்டமாக இந்தக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் இது மற்ற வழித்தடங்களிலும் விரிவுப்படுத்தப்படும் என்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.