அடுத்தடுத்து தீவிரவாதிகள் கைதாவதால் தொடரும் பரபரப்பு

சென்னை அம்பத்தூர் முதல் நேபாளம் வரை ஐயாயிரம் கிலோ மீட்டர் தூரம் கண்காணித்து, தீவிவாதிகளின் கொட்டத்தை அடக்கி, அவர்களை கைது செய்துள்ளது தமிழக காவல்துறை. பாகிஸ்தானுக்கு தப்பிச் செல்லும் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி வடக்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், 2014 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சையது அலி நவாஸ், அப்துல் சமீம், கடலூரைச் சேர்ந்த காஜா மொய்தீன் ஆகியோரை அம்பத்தூர் எஸ்டேட் காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்து தலைமறைவாகி விட்டனர்.

தலைமறைவான தீவிரவாதிகள் வங்க தேசத்திற்கு தப்பிச் சென்றதாக தகவல் வெளியானது. அவர்கள் குறித்து தகவல் கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என புகைப்படங்களோடு வெளியிடப்பட்டது. தீவிரவாத வழக்குகளில் தொடர்புடைய காஜா மொய்தீன் மற்றும் அவனுடைய கூட்டாளிகள் சையது அலி நவாஸ் ஆகியோர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக தலைமறைவானார்கள்.

இந்நிலையில், தீவிரவாதிகளுக்கு உதவியதாக பெங்களூருவில் வைத்து, முகமது ஹனிப் கான், இம்ரன் கான், முகமது சையது ஆகிய மூன்று பேரை, கடந்த 7 ஆம் தேதி தமிழக கியூ பிரிவு காவல்துறை கைது செய்தது. அவர்களிடமிருந்து 3 துப்பாக்கிகள், 89 புல்லட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மூவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கிளை அமைப்பாக ஹல் ஹந்த் அமைப்பை உருவாக்கி, இந்தியா முழுவதும் நாச வேலை செய்ய திட்டமிட்டம் தீட்டியது அம்பலமானது.

விசாரணையில், மேலும் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டனர். சுரேஷ்குமார் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காஜா மொய்தீன் மற்றும் சையது அலி நவாஸ் இருவரையும், நான்கு நாட்களில் சுமார் 5 ஆயிரம் கிலோமீட்டர் காரில் கொண்டு சென்று, காத்மாண்டுவில் விட, அங்கிருந்து நேபாளம் தப்பிச் சென்றுள்ளனர். பின்னர், குடியரசு தின விழாவில் டெல்லியில் நாசவேலையை அரங்கேற்றம் செய்ய டெல்லி வந்தனர்.

ஹல் ஹந்த் அமைப்பில் மொத்தம் 14 நபர்கள் இந்தியாவில் நாசவேலை செய்ய ஊடுருவி உள்ளனர். இந்து முன்னணி சுரேஷ் குமார் கொலை வழக்கில், பெங்களூருவில் கைது செய்யப்பட்ட மூவரையும், 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த எழும்பூர் இரண்டாவது பெருநகர குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், திங்கள் கிழமை, இஜாஸ் பாட்ஷா என்ற கார் ஓட்டுனரை தமிழக கியூ பிரிவு காவல்துறை, பெங்களூருவில் உள்ள கலசப்பாக்கத்தில் வைத்து கைது செய்தனர்.

இந்நிலையில், தவ்ஃபீக் மற்றும் அப்துல் சமீம் ஆகிய இரண்டு தீவிரவாதிகள், கன்னியாகுமரி சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டும், கத்தியால் குத்தியும் கொடூரமாக கொலை செய்தனர். பெங்களூருவில் கைது செய்யப்பட்ட மூவரிடமும் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி குண்டுகளும், சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை சுட பயன்படுத்தப்பட்ட குண்டுகளும் ஒரே ரகம் என தெரியவந்துள்ளது.

இந்து முன்னணி சுரேஷ் மற்றும் வில்சன் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அனைவரும், ஹல்ஹந்த் என்ற இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

இறந்த உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதியை வழங்கி, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில், சம்பந்தப்பட்ட தீவிரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழக டிஜிபி திரிபாதி கன்னியாகுமரிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும், இந்தச் சம்பவம் வேதனையான சம்பவம் என்றும் விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவர் என்றும் பேட்டியளித்தார்.

காவலில் விசாரிக்கப்பட்ட மூன்று பேர் அளித்த தகவலின் படி, பெங்களூருவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி இஜாஸ் பாஷா, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வரும் 27 ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் இரண்டாவது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நடுவர் ரோஸ்லின் துரை உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், பெங்களூருவில் சதக்கத்துல்லா மற்றும் மெகபூப் பாஷா என மேலும் இரண்டு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்றுவருகிறது.

Exit mobile version