நெல்லை அருகே, வீணாகும் மழை நீரை கிணற்றில் சேமித்து அதனை பொதுமக்கள் பயன்படுத்த உருவாக்கப்பட்டுள்ள கட்டமைப்பை, ஜல் சக்தி அபியான் டெல்லி குழுவினர் நேரில் பார்வையிட்டனர்.
நெல்லை மாவட்டம் மத்தளம்பாறையை அடுத்த குணராமநல்லூரில் ஊராட்சி மன்ற கட்டிடத்திற்கு சொந்தமான இடத்திலும் மற்றும் தெருக்களிலும், வீணாக ஓடும் மழைநீரை ஒன்றாக சேகரித்து அதனை சுத்திகரிப்பு செய்து பழைய கிணற்றை தூர்வாரி அதில் விழும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அமைப்பினை ஜல் சக்தி அபியான் குழுவை சேர்ந்த, பிரிஸ்கா மேத்யூ தலைமையிலான இரண்டு பேர் கொண்ட டெல்லி குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். சுத்திகரிக்கப்படும் முறை, தண்ணீரின் சுகாதாரம் மற்றும் தண்ணீரின் அளவு ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், ஜல் சக்தி அபியான் திட்டமானது, நெல்லை மாவட்டத்தில் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.