ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான தமிழக வீரர்களில் நாகநாதன் என்பவர் சென்னை ஆயுதப்படையில் காவலராக பணி புரிந்து கொண்டே தேர்வாகியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23ஆம் தேதிமுதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறவுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர் தேர்வாகியுள்ளனர். இதில் 400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் தேர்வான நாகநாதன் என்பவர் சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் ஆவார். ராமநாதபுரம் கமுதியில் சிங்கம்புலியம்பட்டியை பகுதியைச் சேர்ந்தவர். இவரது தந்தை பாண்டி தாய் பஞ்சவர்ணம் ஆவார். கடந்த ஜூலை மாதம் 2018 ஆம் ஆண்டு சென்னை காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்துள்ளார்.
பணியில் சேர்ந்தாலும் தொடர்ந்து தடகள போட்டிகளில் ஆர்வம் கொண்டவராக நாகநாதனுக்கு சென்னை காவல்துறை உயரதிகாரிகள் விளையாட்டில் சாதிப்பதற்கு பல்வேறு வகையில் உறுதுணையாக இருந்துள்ளனர். காவல்துறையில் பணிபுரிந்த போது பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் தடகளப் போட்டிகளில் பங்கு பெறுவதற்கு நாகநாதனுக்கு உத்வேகம் அளித்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் நடைபெற உள்ள, ஒலிம்பிக் தகுதி போட்டியில், 400 மீட்டர் ஓட்ட பிரிவில் பங்கேற்க தேர்வான போது, பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக, பஞ்சாப் செல்ல இருந்த நாகநாதனை பாராட்டி, அப்போது போலீஸ் கமிஷனராக இருந்த மகேஷ்குமார் அகர்வால், ‘ஸ்போர்ட்ஸ் கிட்’ வழங்கி வாழ்த்தி அனுப்பினார்.
இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நாகநாதன் தேர்வானதற்கு சென்னை காவல்துறை ஆணையர் உட்பட பல்வேறு காவல் துறை உயரதிகாரிகள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். காவல் துறையில் இருந்து ஒலிம்பிக் போட்டிக்கு நாகநாதன் தேர்வானதற்கு பல காவலர்களும் பெருமையாக பேசி வருகின்றனர்.