மரக்காணம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் உப்புக்கு, உரிய விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மரக்காணம் உப்பு உற்பதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான 3 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் 25 லட்சம் டன் முதல் 30 லட்சம் டன் வரை உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்புகள் புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு, வழக்கத்துக்கு மாறாக கோடை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால், உப்பு உற்பத்தி அதிகளவில் நடைபெற்று வருகிறது. உப்பு உற்பத்தி அதிகரித்தாலும், விலை விழ்ச்சியால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.