சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் நட்சத்திர வீரர்கள்

2019ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தன. இந்த நிலையில், நட்சத்திர வீரர்கள் பலர் தங்கள் ஓய்வினை அறிவித்து வருகின்றனர். அப்படி ஓய்வினை அறிவித்த வீரர்கள் குறித்த ஒரு தொகுப்பினை பார்க்கலாம்.

கிறிஸ் கெயில்: Universal Boss என்று அழைக்கப்படும் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெயில், இந்த உலகக் கோப்பையின் கடைசி லீக் போட்டியோடு தனது ஓய்வினை அறிவித்து விட்டார். பந்துகளை பவுண்டரிகளுக்கு பறக்க விடுவதையே வாடிக்கையாகக் கொண்ட கிறிஸ் கெயில், 1999ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். சிறந்த டி20 வீரராக திகழ்ந்த கெயில், டெஸ்ட் போட்டிகளில் 300 ரன்களையும், ஒருநாள் போட்டிகளில் 200 ரன்களையும், டி20 போட்டிகளில் 100 ரன்களையும் அடித்த ஒரே வீரர் ஆவார். 2014ம் ஆண்டோடு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதை நிறுத்திக் கொண்ட கெயில், தனது 5வது உலகக் கோப்பை தொடருடன் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றுக்கொண்டார். தான் உலகக் கோப்பையுடன் விடைபெற நினைத்ததாகவும், அது நிறைவேறாமல் போனது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்தார். கிறிஸ் கெயிலின் ஓய்வு, அவருடைய அதிரடி ஆட்டத்தை ரசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஷோயப் மாலிக்:பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், ஆல் ரவுண்டருமான ஷோயப் மாலிக், அரையிறுதிக்கு முன்னேறாமல் கடைசி லீக் போட்டியுடன் பாகிஸ்தான் வெளியேறிய நிலையில், தனது ஓய்வினை அறிவித்தார். 1999ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் கால்தடத்தினை பதித்த ஷோயப் மாலிக், ஒருநாள் போட்டி, டெஸ்ட், டி 20 என அனைத்து விதமான போட்டிகளிலும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி, பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரராகத் திகழ்ந்தார். 2008ம் ஆண்டு ஒரு நாள் போட்டிகளின் ஆல் ரவுண்டருக்கான தரவரிசைப் பட்டியலில், உலகளவில் இரண்டாம் இடம் பிடித்தார். டி20 போட்டிகளில் 2000 ரன்களைக் கடந்த முதல் ஆசிய வீரர், உலகிலேயே 100 டி20 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் ஆகிய சாதனைகளுக்கெல்லாம் சொந்தக்காரர் ஷோயப் மாலிக். உலக கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்த தவறிய அவருக்கு இறுதி போட்டிகள் மோசமாக அமைந்தன. தன்னுடன் விளையாடிய வீரர்கள், பயிற்சியாளர்கள், உற்சாகப்படுத்திய ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஷோயப் மாலிக், சர்வதேச போட்டிகளில் இருந்து பிரியாவிடை பெற்றார்.

இம்ரான் தாஹிர்:தென் ஆப்பிரிக்காவின் சுழல் பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர், ஆஸ்திரேலியாவுடனான கடைசி லீக் போட்டியோடு ஓய்வு பெறப் போவதாக அறிவித்து விட்டார். பாகிஸ்தானில் பிறந்த இம்ரான் தாஹிர், 2011ம் ஆண்டு தன்னுடைய 31வது வயதில், தென் ஆப்பிரிக்க அணிக்காக சர்வதேச போட்டிகளில் களம் இறங்கினார். கலங்கடிக்கும் இவரது கூக்ளிக்கு விக்கெட்டினை பறிகொடுக்காத பேட்ஸ்மேன்களே இல்லை என கூறலாம். ஒருநாள் போட்டிகளில் 7 விக்கெட்டுகளை எடுத்த முதல் தென் ஆப்பிரிக்க வீரர், ஒருநாள் போட்டிகளில் குறைந்த ஆட்டங்களில் 100 விக்கெட்டுகளை எடுத்த தென் ஆப்பிரிக்க வீரர், டி20 போட்டிகளில் முதலாவதாக 50 விக்கெட்டுகளை எடுத்த தென் ஆப்பிரிக்க வீரர் ஆகிய சாதனைகளுக்கெல்லாம் சொந்தக்காரர் இம்ரான் தாஹிர். டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஏற்கனவே வெளியேறிய இம்ரான் தாஹிர், தற்போது ஒருநாள் போட்டிகளில் இருந்தும் விடைபெறுகிறார். எனினும் டி20 போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாடுவார் என்ற அறிவிப்பு சற்றே மகிழ்ச்சி தருவதாக அமைந்துள்ளது.

இவர்கள் தவிர இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மஹேந்திர சிங் தோனி, தென் ஆப்பிரிக்க அணியின் வீரர்களான ஹசிம் அம்லா மற்றும் டேல் ஸ்டெய்ன், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கா, பங்களாதேஷ் அணியின் மஷ்ரபே மோர்தசா ஆகிய வீரர்களும் இந்த உலகக் கோப்பை தொடரோடு அவர்களது ஓய்வினை அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய வீரர்கள் பலரும் தங்கள் ஓய்வினை அறிவிக்க, கிரிக்கெட் ரசிகர்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version