இலங்கை நாடாளுமன்றம் வரும் 14-ம் தேதி கூடும் – அதிபர் சிறிசேனா அறிவிப்பு

இலங்கை நாடாளுமன்றம் வரும் 14-ம் தேதி கூடும் என்று அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கேவை இலங்கையின் பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்த அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா, புதிய பிரதமராக ராஜபக்சேவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்ததுடன் நாடாளுமன்றத்தையும் முடக்கினார்.

இதனால் அதிருப்தி அடைந்த சபாநாயகர் ஜெயசூர்யா இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நீடிப்பதாக அறிவித்தார். இதனால் உள்நாட்டு அரசியல் குழப்பம் உச்சத்தை எட்டியது.

தற்போது, இரு அணியினரும் எம்.பி.க்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே முடக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்றத்தை உடனே கூட்டி ஜனநாயகத்தை நிலை நாட்ட வேண்டும் என இலங்கை அதிபரை ஐ.நா வலியுறுத்தியது. சர்வதேச அளவில் எதிர்ப்பு அதிகரித்த நிலையில், வரும் 7-ம் தேதி, நாடாளுமன்றத்தை கூட்ட அதிபர் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், வரும் 14-ம் தேதி காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடும் என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Exit mobile version