இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று இருபது ஓவர் போட்டிகளில் விளையாடும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டிருந்தது. செப்டம்பர் 27 ம் தேதி முதல் போட்டி தொடங்குகிறது. பாதுகாப்பு காரணமாக மூத்த வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்துவிட்ட நிலையில், இளம் வீரர்கள் அடங்கிய இலங்கை அணி செவ்வாய் அன்று பாகிஸ்தான் புறப்பட்டு சென்றது.
இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் புறப்படுவதற்கு முன்னதாக கொழும்புவில் உள்ள புத்த துறவிகளிடம் ஆசிப் பெற்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் சென்று விளையாடுவதற்கு எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை என்று இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் சுற்றுப்பயணம் குறித்து தசுன் ஷனகா கூறியதாவது, நான் ஏற்கனவே இங்கு வந்திருக்கிறேன். எங்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்திகரமாக இருந்ததாக கூறினார். எனது தலைமையிலான அணியை பாகிஸ்தான் அழைத்து வந்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது. மேலும், களத்தில் நாங்கள் கடுமையாக போராடுவோம் என்று தசுன் ஷனகா தெரிவித்துள்ளார்.
இதேபோல், இலங்கை அணியின் ஒருநாள் கேப்டன் திரிமன்னே, பாகிஸ்தானில் மிக உயர்ந்த அளவிலான பாதுகாப்பு உத்தரவாதங்கள் தங்களுக்கு வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், தலைவர்கள் வருகையின் போது வழங்கப்படும் பாதுகாப்பு தங்களுக்கு ஒதுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது இலங்கை அணி வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், 6 வீரர்கள் காயமடைந்தனர். பாகிஸ்தான் போலீஸ்காரர்கள் 6 பேர் மற்றும் 2 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, சர்வதேச அணிகள் பாகிஸ்தான் அணி சென்று விளையாடுவதை தவிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.