இலங்கையில் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில் பர்தா மற்றும் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு தடை விதித்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் கடந்த 21ம் தேதி கிறிஸ்தவ ஆலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலில் 253 பேர் பலியானார்கள். கடந்த வெள்ளிக்கிழமை, பயங்கரவாதிகள் தங்கியிருந்த ஒரு வீட்டை ராணுவத்தினர் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர். அங்கு பதுங்கியிருந்த தற்கொலை படை தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்கச்செய்து தற்கொலை செய்துகொண்டனர். இதில் பெண்கள், குழந்தைகள் என 15 பேர் பலியானார்கள்.
இந்த நிலையில் இலங்கையில் பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து பர்தா, முகத்திரை போன்ற முகத்தை மறைக்கும் ஆடைகளை அணியக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அமலாவதாக அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார்.
நாட்டு மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவசரகால நடவடிக்கையாக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொருவரும் தங்களது அடையாளத்தை தெளிவாக உறுதிபடுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.