புலனடக்கத்தையும், மனக்கட்டுப்பாட்டையும், இறையாண்மையின் முக்கிய கொள்கையாக கருதும் ரமலான் நோன்பு குறித்த ஒரு சிறப்பு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
தனித்திரு, விழித்திரு, பசித்திரு என்பதே ரமலான் மாதத்தில் பின்பற்றப்படும் முக்கிய கொள்கை. இதன் மூலம் தனி மனிதனின் உடலும், உள்ளமும் தூய்மை பெற்று இறைவன் அருகில் சென்றடைவான் என்பது இஸ்லாம் மக்களின் நம்பிக்கை. இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதத்தில் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. இந்த மாதமே இஸ்லாமியர்களின் புனித மாதம் எனவும் கருதப்படுகிறது. இஸ்லாமியர்கள் அனைவரும் அதிகாலையில் சூரியன் உதயம் ஆவதற்கு முன்பு முதல் மாலையில் சூரியன் மறையும் வரை உண்ணாமல், நீர் அருந்தாமல், ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி மனக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் ரமலான் நோன்பின் மகத்துவம்.
இது இறைமையுடன் கூடிய நல் ஒழுக்க பயிற்சியாகவும் பார்க்கப்படுகிறது. நோய் வாய்ப்பட்டவர்கள், வயது முதிர்ந்தோர், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் உள்ளிட்டோருக்கு நோன்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மனிதன் வாழும் பொழுது செய்யும் நன்மை மற்றும் தீமைகளுக்கு ஏற்ற பலன் இறப்பிற்கு பின் கிடைக்கும் என்பதும், அதனால் ஈகையும், ஒழுக்கமுமே மனித வாழ்விற்கு சிறந்தது என்பதையும் உணர்த்துகிறது ரமலான் நோன்பு. இன்று தொடங்கியுள்ள ஈகை திருநாளாம் ரமலான் நோன்பு 30 நாட்களுக்கு கடை பிடிக்கப்பட்டு, நிறைவாக ரமலான் பண்டிகையாக ஷவ்வால் முதல்பிறை தினத்தன்று கொண்டாடப்படும்.