ஆசையைத் தூண்டும் ஆன்லைன் விளையாட்டுகள்… வலை யாருக்கு?

”ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி இளைஞர் தற்கொலை”, ”ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து குடும்பமே தற்கொலை” என்ற செய்திகள் எல்லாம் இப்போது தொலைக்காட்சிகளில், செய்தித்தாள்களில் வாரம் ஒருமுறையாவது இடம் பெற்றுவிடுகிறது. ஆன்லைனில் நன்மைகள் ஆயிரம் இருக்கும்போது விளையாட்டுக்கும், சூதாட்டத்திற்கும் உயிரை விடும் அளவுக்கு என்ன நடக்கிறது அந்த மாய உலகில்?

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு முதன்முதலாக கண்டறியப்பட்ட நாளில் பெற்றோர்களுக்கு இருந்த பயமும், பதைபதைப்பையும் விட 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி இருந்த பயமும் பதைபதைப்பும் பல மடங்கு அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியான ஒற்றைச் செய்தி, உடனடியாக அனைத்து பெற்றோர்களையும் தங்கள் குழந்தைகளை தேடச் செய்தது. அவர்கள் கைகளில் இருந்த செல்போன்களை பிடுங்கச் செய்தது. அவர்களை தங்கள் கண்காணிப்பிலேயே வைக்க வேண்டும் என்ற, கூடுதல் அக்கறையை ஏற்படுத்தியது. ஆனால் உண்மையில் அந்த நாளில் என்ன நடந்தது என்பதுகூட, இப்போது யாருக்கும் நினைவிருக்காது.

மதுரை மாவட்டத்தின் திருப்பரங்குன்றத்திற்கு அருகே இருக்கும் மொட்டமலையை நோக்கியே, தமிழக ஊடங்களின் கேமராக்கள் அன்றைக்கு நீண்டன. கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துவந்த விக்னேஷ் என்ற 19 வயது மாணவர் தூங்கி எழுந்த சில மணி நேரங்களில் தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார். தங்கள் மகன் தற்கொலை செய்துகொண்டது ஏன் எதற்கு என குடும்பத்தினருக்கு எதுவும் உடனடியாக புரியவில்லை. ஆனால் தற்கொலைக்கான காரணத்தையும் குறிப்புகளால் உணர்த்திவிட்டே தூக்கிட்டு இறந்திருந்தார் அந்த மாணவர். அதுவும் கூட குடும்பத்திற்கு சொல்லிவிட்டு சாக வேண்டும் என்பதற்காக அல்ல. அந்த சிறுவனுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டு குறிப்பு அது. அவரை தற்கொலை செய்துகொள்ள வழிகாட்டியவர் யார்? என்ன குறிப்பு அது? என்று யோசிக்கிறார்களா?

விக்னேஷுக்கு வழிகாட்டிய அந்த நபர் சொந்தமோ, நட்போ அல்லது நேரில் பார்த்ததோ கூட கிடையாது. வெறும் 50 நாட்கள் ஒரு விளையாட்டிற்காக வழிகாட்டியவர். அந்த விளையாட்டின் இறுதி வழிகாட்டுதல்தான் தற்கொலை. ஒரு சைபர் சைக்கோ உருவாக்கிய ”புளூவேல்”தான் அந்த விளையாட்டு. புளூவேல் எனப்படும் திமிங்கலத்தின் வரைபடத்தை இடது கையில் ரத்தத்தால் வரைந்து வைத்திருந்ததுதான் அந்த சிறுவன் தற்கொலைக்கான காரணத்தை உறுதிப்படுத்திய குறிப்பு. ஒரு உயிரோடு நிற்கவில்லை, இதற்கு முன்பும் பின்பும் பல நாடுகளில் அடுத்தடுத்து சிறுவர்கள் தூக்கிட்டு இறப்பது, மொட்டை மாடியில் இருந்து குதித்து சாவதுமாக இருந்தனர். குழந்தைகளை கண்காணிக்க அரசு நிர்வாகமும், காவல்துறையும் எச்சரித்தது. வெளிநாடுகளில், வெளிமாநிலங்களில் எங்கோ நடந்ததை செய்திகளில் படித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நம் மாநிலத்திலேயே இப்படியான சம்பவம் நடந்தது நெஞ்சை பதற வைத்தது.

மேற்கு வங்கத்தை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவர் புளூவேல் அட்மின் வழங்கிய அறிவுறுத்தல்படி தற்கொலை செய்துகொள்வதற்காகவே அங்கிருந்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு வந்தார். அவரை ரயில்வே காவல்துறை மீட்டு மனநல காப்பகத்தில் சேர்த்தது, பின்னர் ஆலோசனைகள் வழங்கி குடும்பத்துடன் சேர்த்தனர். ஒரு விளையாட்டு, அதுவும் செல்போனிலோ, கணினியிலோ விளையாடுவது உயிரைப் பறிக்கும் என்ற பேரபாய எச்சரிக்கையை பெற்றோர்களுக்கு முதன்முதலாக உணர்த்தியது இந்த புளூவேல்தான்.

சமூகத் தொடர்புகள் குறைந்து, ஆன்லைனில் மூழ்கிக் கிடந்த சிறுவர்களை நிஜ உலகின் தொடர்பில் இருந்து விடுவித்து, விர்ச்சுவல் எனப்படும் மாய உலகத்திற்குள் அவர்களை அழைத்துச் சென்றது புளூவேல். தொடக்கத்தில் எளிதான சவால்களை கொடுத்து, சிறுவர்களை கவர்ந்து போகப்போக கடினமான சவால்களை கொடுத்தது. நடு இரவில் எழுந்து ஹாரர் திரைப்படங்களை பார்க்க வைப்பது, மேற்கூரையில் நடக்க வைப்பது, உடலை கிழித்து காயம் செய்து கொள்வது, பிறரை துன்புறுத்த செய்வது என சிறுவர்களை மனதளவில் தளர்த்தி, தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி, இந்த உலகத்தில் வாழ நீ தகுதியற்றவன் எனக்கூறி மூளைச்சலவை செய்தது புளூவேல். இப்படியாக இதுவரை உலகம் முழுவதும் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பிஞ்சுக்களின் உயிர்களைப் பறித்திருக்கிறது இந்த புளூவேல்.

உலக இயங்கியலில் குழந்தைகளின் வாழ்வு என்பது எத்தனை இன்பமானது! இந்த உலகமே அவர்களுக்கானது தானே? ஆனால் இந்த உயிர்க்கொல்லி விளையாட்டை ஏன் உருவாக்கினேன் என ரஷ்யாவை சேர்ந்த பிலிப் புடேய்கின் அளித்த விளக்கம் மிக கொடூரமானது. சமுதாயத்தில் இருக்கும் தேவையில்லாத மனிதர்களை நீக்கி சுத்தம் செய்யவே இதை உருவாக்கியதாக பிலிப் புடேய்கின் உலகையே அதிரச் செய்தார். 2013ஆம் ஆண்டில் இதை உருவாக்கியபோது பிலிப்பிற்கு வயது 17தான் இதில் மிகப்பெரும் வேதனையும். அதுவும் ஒரு உளவியல் மாணவர் அவர். ஒருவழியாக நீதிமன்றம் தலையிட்டு, 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் புளூவேல் விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. கூகுள், வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் என அனைத்து தளங்களில் இருந்தும் புளூவேல் சர்வர் லிங்க் நீக்கப்பட்டது.

ஆனால் புளூவேலை ஒழித்துவிட்டால் எல்லாம் தீர்ந்துவிடாது என்பதை நவீன தகவல் தொழில்நுட்ப உலகம் மீண்டும் குறுகிய காலத்திற்குள்ளேயே நிரூபித்து விட்டது. வெள்ளை நிற முதிர்ந்த தோலுடனும், வீக்கமான கண்களுடனும் கொடூரமான சிரிப்பை வெளிப்படுத்தும் பேய் தோற்றத்திலான ஒரு பெண்ணின் உருவத்தை, இணையம் பயன்படுத்துவோர் கடந்த சில ஆண்டுகளில் நிச்சயமாக ஒரு முறையாவது பார்த்திருக்கக்கூடும். 2016ஆம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோ நகரில் நடந்த கண்காட்சியில் வைக்கப்பட்ட பொம்மை உருவம் அது. அந்த பெண் உருவ பொம்மையின் பெயர் மோமோ. இந்த பெயரை வைத்துதான் தற்கொலைக்கு தூண்டும் அடுத்த சவால் விளையாட்டு உலகம் முழுக்க பரவத் தொடங்கியது.

மோமோ சவாலை ஏற்றவர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் விவரங்கள் திருடப்பட்டன. பயனர்கள் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டனர். மன அழுத்தத்தையும், பயத்தையும் அதிகரிக்கச் செய்தது இந்த விளையாட்டு. தூக்கமின்மையை ஏற்படுத்தியது. வன்முறையை தூண்டியது. விளையாடியவர்களிடம் இருந்து பணத்தை பறித்தது. இறுதியாக அவர்களை தற்கொலை செய்துகொள்ள கட்டளையிட்டது. இந்த விளையாட்டுக்கும் மேற்கு வங்கத்தில் இரண்டு இளைஞர்கள் பலியாகினர். சோக்கிங் கேம், மரியம்ஸ் கேம் என தற்கொலைக்கு தூண்டும் எண்ணற்ற இணையதள விளையாட்டுகள் புதிது புதிதாக முளைத்துக்கொண்டேதான் இருக்கின்றன.

நேரடியாக உயிரைப் பறிக்கும் இந்த விளையாட்டுகள் மட்டும்தான் ஆபத்தானவையா என்றால் நிச்சயம் இல்லை. இதைவிட அதிகம் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய எண்ணற்ற விளையாட்டுகள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. கூடி விளையாடு பாப்பா என்ற காலம் போய், வீட்டை விட்டு வெளியே செல்லாதே பாப்பா என குழந்தைகளை வீட்டுக்குள் அடைத்து வைக்கத் தொடங்கியிருக்கிறது நகர்ப்புற நடுத்தர வர்க்கம். குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே இருந்தால்தான் நல்ல பண்புகளுடனும், கல்வித் திறனோடும் வளர்வார்கள் என முட்டாள்தனமாக நம்பி இவ்வாறு அடைத்து வைக்கத் தொடங்கினர். ஆனால் இதனால் சமூகத் தொடர்பை இழந்த குழந்தைகள், இதற்கு மாற்றாக தேடத் தொடங்கியது இணையத்தைதான். வீட்டுக்குள் முடங்கிய குழந்தைகள் எந்நேரமும் கணினியிலும், செல்போனிலும் மூழ்க ஆரம்பித்தனர்.

எண்ணற்ற விளையாட்டுகள் அவர்களை நிஜ உலகில் இருந்து மாய உலகிற்குள் அழைத்துச் சென்றது. தங்கள் குழந்தைகள் செல்போன், கணினிகளை கையாள்வதை பார்த்து தொடக்கத்தில் வியந்த பெற்றோர்கள் ஒருகட்டத்தில் அச்சத்திற்கு ஆளானார்கள். அப்படி சிறுவர்கள், குழந்தைகளை ஓர் அறைக்குள்ளேயே சுவாரஸ்யத்தின் உச்சத்திற்கு அழைத்துச்சென்ற சமீபகால வரத்து பப்ஜி. இப்போது இந்தியாவில் இந்த விளையாட்டு முழுமையாக தடை செய்யப்பட்டிருந்தாலும், இதன் தாக்கம் தணிய மேலும் சில காலமாகும் என்றேதான் சொல்ல வேண்டும். தென்கொரிய வீடியோ கேம் நிறுவமான புளூஹோல் 2017ஆம் ஆண்டில் இந்த விளையாட்டை கண்டுபிடித்தது. தற்போது இதன் உரிமம் சீன நிறுவனத்திடம் இருக்கிறது. உலகம் முழுவதும் கடந்த ஆண்டுவரை சுமார் 55 புள்ளி 5 கோடி பேர் இந்த விளையாட்டை பதிவிறக்கம் செய்துள்ளனர். அதில் என்ன வேடிக்கை என்றால், இந்தியாவில் மட்டும் 11 புள்ளி 6 கோடி பேர் இதனை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

பாலின வேறுபாடு இன்றி சிறுவர், சிறுமிகள் முதல் இளைஞர்கள், இளம்பெண்கள் வரை அனைவரிடத்திலும் இந்த விளையாட்டு ஏற்படுத்திய தாக்கமும், பாதிப்பும் எண்ணிலடங்காதது. சமூகத் தொடர்பு அறுந்து இணையத்தில் மூழ்கத் தொடங்கிய இன்றையை தலைமுறைக்கு மணிக்கணக்கிலும், நாள்கணக்கிலும் சுவாரஸ்யம் குன்றாமல் தீனி போட்டது பப்ஜி. ஒரே வீட்டுக்குள் இருந்தாலும் குழந்தைகள் பெற்றோருடன் பேசும் நேரத்தை கூட பறிக்கத் தொடங்கியது இந்த பப்ஜி. அவனை சுடு, கொல்லு, துப்பாக்கிய எடு என செல்போனை வெறித்துப் பார்த்தபடியே குழந்தைகள் தனிமையில் பேசுவதை பார்த்து எந்த பெற்றோருக்குத்தான் அச்சம் எழமால் இருக்கும்? ஆனால் குழந்தைகளை இதிலிருந்து மீட்பதற்கு வழி தெரியாமல் பல மனநல மருத்துவர்களை நோக்கி ஓட ஆரம்பித்தனர். சிறுவர்கள், இளைஞர்கள் மத்தியில் கட்டுங்கடங்காத வன்முறை எண்ணத்தை விதைத்தது பப்ஜி. நிஜ உலகில் பயன்படுத்தும் ஆயுதங்கள், துப்பாக்கிகளின் பெயர்கள் பப்ஜியில் அப்படியே பயன்படுத்தப்பட்டன. இதுவும் ஒருவகையில் விபரீதமாகவே அமைந்தது.

வீடியோ கேம்களுக்கு குழந்தைகள் அடிமையாவது புதிதல்ல என்றாலும் கூட, இதன் பாதிப்புகள் பழைய விளையாட்டுகளை மிகத் தீவிரமாக இருந்தது. அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ பழைய விளையாட்டுகளில் செலவிடுவதே ஆபத்தாக எச்சரிக்கப்பட்டது. ஆனால் பப்ஜியில் நாள் முழுக்க மூழ்கி கிடந்தனர். சமூகத்தில் இருந்து விலகி தனிமைப்பட்டனர். ஓடி ஆடி உடல் களைக்க விளையாட வேண்டிய குழந்தைகள், தாளிடப்பட்ட அறைக்குள், உடலைக் கூட அசைக்காமல் உட்கார்ந்தபடியே இருந்து சோம்பேறிகளாக மாறத் தொடங்கினர். கண் பார்வை பாதிப்பு எதிர்கொள்ள நேர்ந்தது. தலைவலியால் அவதியுற்றனர். ஒட்டுமொத்தத்தில் சிறுவர்களின் உடலை, மனதை, ஆரோக்யத்தை, கல்வியை மிக மோசமாக பாதித்தது இந்த விளையாட்டு.

16 வயது சிறுவனுக்கு மாரடைப்பு என்றால் நம்ப முடியுமா உங்களால்? மத்தியப் பிரதேச மாநிலம் நீமூச் பகுதியில் கடந்த ஆண்டு தொடர்ந்து 6 மணி நேரம் பப்ஜி விளையாடிய சிறுவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. கடுமையான மன அழுத்தத்தில் இருந்த அந்த சிறுவன் மருத்துவமனையிலேயே மரணித்துவிட்டார். அதுமட்டுமல்ல, தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஜாகிதியல் பகுதியில் தொடர்ச்சியாக 45 நாட்கள் பப்ஜி விளையாடிய 20 வயது வாலிபர், கடுமையான தோள்பட்டை வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் போதே உயிரிழந்தார். மத்தியப் பிரதேச மாநிலம் சிஹிந்தவாரா என்ற பகுதியில், பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த போது தண்ணீர் தாகமெடுத்த ஒரு சிறுவன், தவறுதலாக ஆசிட்டை எடுத்து குடித்து விட்டார். மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில் ரயில் வருவது கூட தெரியாமல், பப்ஜி விளையாட்டில் மூழ்கியிருந்த 2 சிறுவர்கள் ரயிலில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். வேலைக்கு போகாமல், குடும்பத்தை பார்க்காமல் எந்நேரமும் பப்ஜி விளையாடிக் கொண்டே இருக்கிறார் என் கணவர், அவருடன் இதற்கு மேலும் என்னால் இணைந்து வாழ முடியாது என அகமதாபாத்தில் விவகாரத்து கோரி கோர்ட் வாசலில் நின்றார் 19 வயது இளம்பெண். கல்லூரி பொருளியல் தேர்வில் பப்ஜி விளையாடுவது எப்படி என முதலாமாண்டு மாணவர் எழுதிவைத்து, அரியர் வைத்த கொடுமையெல்லாம் நடந்தேறியது. ஆந்திராவில் பப்ஜிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், ஆன்லைன் லிங்க் மூலம் கொள்ளை பணத்தை செலவழித்து சிலர் பப்ஜி விளையாடி வந்தனர். அப்படி பப்ஜி விளையாட்டில் துப்பாக்கி வாங்குவதற்காக 3 லட்சம் ரூபாய் பணம் கேட்டு தந்தை கொடுக்காததால் திருப்பதியில் 21 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இவற்றையெல்லாம் விட பப்ஜி எந்த அளவுக்கு ஆபத்தானது என்பதை நாட்டுக்கே உணர்த்திய மிக கொடூரமான சம்பவம் ஒன்று தலைநகர் டெல்லியில் நடந்தது. 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வாடகைக்கு அறை எடுத்து சில வாலிபர்கள் பப்ஜி விளையாடி வந்துள்ளனர். அங்கு சென்று பப்ஜி விளையாடக்கூடாது என்று பெற்றோர் கண்டித்த ஒரே காரணத்திற்காக, தாய், தந்தை, சகோதரி என ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொலை செய்துவிட்டு சிறைக்கு சென்றுவிட்டார் 19 வயது வாலிபர். இந்த கொலைபாதக விளையாட்டிற்கு தமிழ்நாடு மட்டும் விதிவிலக்காக இல்லை. இங்கும் எண்ணெற்ற மோசமான நிகழ்வுகள் அண்மைக்காலம் வரை நடந்திருக்கிறது. பப்ஜி விளையாட பெற்றோர் ரீசார்ஜ் செய்துதரவில்லை என்ற ஒற்றை காரணத்திற்காக, இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்காமங்கலத்தை அடுத்த தளவாய்புரத்தில், கல்லூரி மாணவர் கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், இரவும் பகலும் பப்ஜி விளையாடி கொண்டிருந்த மாணவரிடம் இருந்து பெற்றோர் செல்போனை பிடிங்கி வைத்துள்ளனர். அந்தசமயத்தில் பப்ஜிக்கு தடை விதிக்கப்பட்டதால், இனி பப்ஜியே விளையாட முடியாது என்ற விரக்தியில் அந்த சிறுவன் தற்கொலை செய்துகொண்டார்.

மாய உலகின் வன்முறை கூடாரத்தில் மூழ்கி கிடந்த சிறுவர்கள், இளைஞர்களின் மனதில் ரத்த வெறியையும், தற்கொலை எண்ணத்தையும் பீறிட்டு எழச் செய்து, அதை நிஜ வாழ்விலும் பிரதிபலிக்க செய்கிற மோசமான சிந்தனையை வளர்த்தெடுத்த நவீன கொலைக்கருவியாகவே பப்ஜி இருந்தது. தற்போது இந்த விளையாட்டும் இந்தியாவில் விளையாட முடியாது என்பதால், இனிமேல் எந்த கவலையும் இல்லை என்றெல்லாம் குழந்தைகளின் கையில் செல்போன்களை கட்டுப்பாடின்றி கொடுத்துவிட முடியாது. ஏனென்றால் பப்ஜிக்கு சற்றும் சளைக்காத ஃப்ரீ பயர் போன்ற வன்முறை எண்ணத்தை விதைக்கும் விபரீதமான விளையாட்டுகள் இப்போதும் இணையத்தில் ஏராளமாய் கொட்டிக்கிடக்கின்றன.

தற்கொலை எண்ணத்தை தூண்டும் சைபர் சைக்கோக்கள், வன்முறை எண்ணத்தை விதைக்கும் விபரீத விளையாட்டுகள் போன்றவற்றில் இருந்து சிறுவர்கள், இளைஞர்களை மீட்பதே பெரும் சவாலான பணியாக இருக்கும் இந்த சூழலில், பெரியவர்களை பாதுகாப்பது அதைவிட சவாலானது என்பதை அண்மைக்கால சில நிகழ்வுகள் உணர்த்திக் கொண்டிருக்கின்றன. பணம் என்றால் யாரைத்தான் ஆசை விட்டது? பணத்திற்கு ஆசைப்பட்டு இணையதள சூதாட்டங்களில் சிக்கி சீரழிந்த குடும்பங்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

ஒருவனை ஏமாற்ற வேண்டுமென்றால் முதலில் அவன் ஆசையை தூண்ட வேண்டுமென்ற சதுரங்க வேட்டை படத்தின் வசனம் நிஜத்தில் எவ்வளவு பொருந்திப்போகும் என்பதற்கு ஆன்லைன் சூதாட்டங்களே மிகப்பெரிய உதாரணம். ஆன்லைன் ரம்மி விளையாடுங்கள், சதுரங்கம் விளையாடுங்கள், கிரிக்கெட் மீது பந்தயம் கட்டுங்கள் அந்தந்த துறை பிரபலங்களை வைத்து கோடிக்கணக்கில் விளம்பரச் செலவு செய்து இணையவாசிகளுக்கு வலைவீசுகிறது ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள். தான் நேசிக்கும் ஹீரோ, விளையாட்டு வீரரே சொல்லிவிட்டார் என அந்த வலையில் வீழ்பவர்கள் ஏராளம். குறிப்பாக ஆன்லைன் ரம்மி, இந்தியாவில் கோடிகளில் லாபமீட்டும் மிகப்பெரிய சூதாட்டமாக மாறியிருக்கிறது. தொலைக்காட்சிகளில், வானொலிகளில், பேஸ்புக்கில், ட்விட்டரில், யூடியூபில் என எதை தொட்டாலும் முதலில் வந்து நிற்பது இந்த ஆன்லைன் ரம்மி விளம்பரம்தான். ஒரு ரூபாய் போட்டால் பத்து ரூபாய், பத்து ரூபாய் போட்டால் நூறு ரூபாய், நூறு ரூபாய் போட்டால் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம் என ஆசையைத் தூண்டும் இந்த விளையாட்டுக்கு இன்றைக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அடிமையாகி, வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வேதனையான உண்மை.

சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் மாதம் ஒரு லட்ச ரூபாய் வரை சம்பாதித்து வந்த 32 வயது இளைஞர் அருள், ஆன்லைன் ரம்மி மீது ஏற்பட்ட மோகத்தால், லட்சக்கணக்கில் பணத்தை போட்டு ரம்மி விளையாடினார். இதனால் 75 லட்சம் ரூபாய் வரை கடனில் சிக்கிய நிலையில், தனது தாயுடன் இணைந்து கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். 3 வயது குழந்தையையும், இளம்வயது மனைவி திவ்யாவையும் நிர்கதியாக்கிவிட்டு, ஆன்லைன் சூதாட்டத்திற்கு இரையானார் அருள். இதற்கு முன்பு கடந்த ஆண்டு மே மாதத்தில் மதுரையில் உள்ள நாகமலையில் சுப்பிரமணியன், பட்டு மீனாட்சி தம்பதி ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து ஜோடியாக தூக்கில் தொங்கினர். துர்நாற்றம் வீசியதை அடுத்து 5 நாட்களுக்கு பிறகே இந்த ஜோடி தூக்கிட்டு இறந்தது வெளியே தெரிந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த இப்படிப்பட்ட சம்பவங்கள் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அன்றாட செய்திகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. திருச்சியில் காவலர் ஒருவர், கோவையில் வங்கி அதிகாரி என பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. சமீபத்தில் 3 பேர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக் கொண்டனர்.

ஆனால் உயிரிழப்புகளை பற்றிய கவலை ஏதுமின்றி இந்தியாவில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு பிரமிக்கத்தக்க அளவில் வளர்ந்து வருகிறது. பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வெவ்வேறு பெயர்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை வர்த்தக நிறுவனங்களாகவே நடத்தி வருகின்றன. ஆண்டுக்கு சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் புழங்குகிறது. சுமார் 30 லட்சம் பேர் இந்தியா முழுவதும் ஆன்லைன் ரம்மி விளையாடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் சில பன்னாட்டு நிறுவனங்களும் கைகோர்க்க முயற்சித்து வருகின்றன.

ஆனால் இவற்றையெல்லாம் சட்டம் போட்டு முழுமையாக தடுப்பது என்பதெல்லாம் உடனடியாக நடக்கிற காரியம் இல்லை என்பதுதான் எதார்த்தம். ரம்மி விளையாட்டு அதிர்ஷ்டம் சார்ந்தது அல்ல, திறமை சார்ந்தது என்பதால், அதற்கு தடை விதிக்க முடியாது என 2015ஆம் ஆண்டில் நடந்த இதுதொடர்பான வழக்கில் தெளிவுபடுத்தியிருக்கிறது உச்சநீதிமன்றம். ஆனால் ஆன்லைன் ரம்மி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்குவதால், எதிரே விளையாடுபவரின் நம்பகத்தன்மை குறித்து மென்பொருள் வல்லுநர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதுமட்டுமின்றி நேரில் ரம்மி விளையாடும்போது ஒவ்வொரு முறையும் கார்டுகளை குலுக்கி பிரித்து போடுகிறோம். ஆனால் ரம்மியில் அது ஏற்கெனவே வடிவமைக்கப்பட்ட புரோகிராமின்படி இயங்குகிறது. ஆன்லைன் ரம்மி விளையாடினால் அனைவராலும் எளிதாக பணம் சம்பாதிக்க முடியும் என்ற ஆசையை தொடக்கத்தில் தூண்டிவிட்டு, போகப்போக அவர்களுக்கு கடினமாக போட்டிகளை வடிவமைத்து, பணத்தை பிடுங்கும் சதிவலையை ரம்மி நிறுவனங்கள் பின்னுகின்றன என்றும், பணத்தை இழந்தவர்கள் ஒருகட்டத்தில் இழந்தை பணத்தை பிடிக்க ஆயிரம் முதல் லட்சங்கள் வரை கடன் வாங்கி, அதையும் மொத்தமாக இழந்து, இறுதியில் உயிரை மாய்த்துக்கொள்ளும் விபரீத முடிவுக்கு தள்ளப்படுகின்றனர் என்றும் ஆய்வாளர்கள் விவரிக்கின்றனர்.

இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகளை உருவாக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 2010ஆம் ஆண்டில் வெறும் 25ஆகத்தான் இருந்தது. ஆனால் இது கடந்த 9 ஆண்டுகளில் சுமார் 1000 சதவிகிதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. 2019ஆம் ஆண்டில் இந்த நிறுவனங்களின் எண்ணிக்கை 275ஆக உயர்ந்திருக்கிறது. இதனால் ரம்மி மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய ஆன்லைன் விளையாட்டுத்துறையின் மதிப்பு அடுத்த ஒரு ஆண்டுக்குள் சுமார் 8 ஆயிரத்து 200 கோடி ரூபாயாக உயரும் என்று கூறுகிறது கூகுள் மற்றும் கேபிஎம்ஜி இணைந்து நடத்திய ஆய்வு. ஏனென்றால் இந்திய ஆன்லைன் விளையாட்டு சந்தையின் மதிப்பு மிக நீண்டது. உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லாத வகையில், இந்திய மக்கள் தொகையில் 75 சதவிகிதம் பேர் 45 வயதுக்கு உட்பட்டவர்கள். அடுத்த 3 ஆண்டுகளுக்குள் இந்திய இணைய பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 65 கோடியாக உயரும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடும் பயனர்களின் எண்ணிக்கை 60 கோடிக்கும் அதிகம். அதிலும் குறிப்பாக ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடும் 60 சதவிகிதம் பேர் 18 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள்.

எனவே இணையதள விளையாட்டுகளை முற்றிலுமாக ஒழிப்பதோ அல்லது தவிர்ப்பதோ சாத்திமயற்றது. அதேபோல நவீன காலத்தில் இணையதள பயன்பாடு என்பதும் தவிர்க்க இயலாலததாகிவிட்டது. இணையதளம் அத்தியாவசியமாகிவிட்டது என்று கூட சொல்லலாம். அதனால் ஏற்படும் பாதிப்பில் இருந்து நம்மையும், குழந்தைகளையும் காப்பது எப்படி என்று சிந்தித்து செயல்படுவதே ஒன்றே தற்போதைய சூழலில் நம் கையில் இருக்கும் வாய்ப்பு. குழந்தைகள் இடத்தில் செல்போன்களை அளவாக பயன்படுத்த பழக்கப்படுத்துவதும், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு இரையாகமால் நம்மை தற்காத்து கொள்வதுமே நம் கண் இருக்கும் சிறந்த வாய்ப்பு. ஏனெனில் நாம் நிஜ உலகில் இருக்கிறோம், விர்ச்சுவல் உலகில் அல்ல. விர்ச்சுவல் என்னும் அந்த மாய உலகில் நம்மை நாமே வீழ்த்திவிடாமல் தடுக்க, சமூகத்தோடு இரண்டற கலந்து வாழ்வதை விட வேறென்ன அசாத்திய முயற்சி தேவைப்பட போகிறது?

Exit mobile version