இணையதள குற்றங்களை தடுப்பது தொடர்பாக சமூக வலைதளங்களின் பிரதிநிதிகளுடன், தமிழக அரசின் தலைமைச்செயலாளர் ஆலோசனை செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இணையதள குற்றங்கள் அதிகரித்து வருவதால், சமூக வலைதளங்கள் மற்றும் மின்னஞ்சல் கணக்குகளை துவங்க, ஆதாரை கட்டாயமாக இணைக்ககோரி ஆண்டனி கிளமெண்ட் ரூபன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, வாட்ஸ் ஆப், கூகுள், ட்விட்டர் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த வழக்கு தொடர்பாக முழு ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, சமூக வலைதளங்களின் பிரதிநிதிகள் தமிழக தலைமைச் செயலாளர் உடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும், அந்த ஆலோசனை தொடர்பான அறிக்கையையும், அதேபோல சமூக வலைதளங்களின் பதில் மனுவையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Discussion about this post