கன்னியாகுமரி அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற சுமார் ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குமரி மாவட்டம் பறக்கும் படை அதிகாரிகள் அழகிய மண்டபம் பகுதியில் ரோந்துப் பணியில் இருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக அந்த வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை நிறுத்த முயன்ற போது வாகனம் நிற்காமல் சென்றது. தொடர்ந்து வாகனத்தை துரத்தி சென்ற அதிகாரிகள் காட்டாத்துறை பகுதியில் வாகனத்தை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது, காரில் கடத்த முயன்ற சுமார் 1000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்ல கொண்டுவரப்பட்டதாக தெரிகிறது. அரிசியும் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு அரிசியை உடையார் விளை அரசு கிடங்கிலும், கார் கல்குளம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்திலும் ஒப்படைக்கப்பட்டது.
ரேசன் அரிசியை கடத்தி கொண்டு வந்து, தலைமறைவான நபர் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.