ராமேஸ்வரம் முயல் தீவு அருகே கடலில் தூக்கி எறியப்பட்ட 17 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இலங்கையில் இருந்து கடத்தி வந்த தங்கக் கட்டிகள், கடத்தல் கும்பல் முயல்தீவு கடலில் வீசியதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, முயல்தீவு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அந்த பகுதியில் சுற்றித் திரிந்த இருவரை பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், முயல்தீவு அருகே 17 கிலோ தங்கக் கட்டிகளை கடலில் வீசியதை ஒப்புக்கொண்டனர். இதனை தொடர்ந்து நீச்சல் வீரர்களின் உதவியுடன் கடலில் வீசப்பட்ட 17 கிலோ தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 6 கோடியே 80 லட்சம் ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.