அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் ஒரே மாதிரியான டிரைவிங் லைசென்ஸ், ஆர்.சி. புத்தகம் நாடு முழுவதும் அடுத்த ஆண்டு அமலுக்கு வருகிறது.
போக்குவரத்துறையில் ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி டிரைவிங் லைசென்ஸ், ஆர்.சி. புத்தகம் ஆகியவற்றை ஒரே மாதிரியாக அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு மாநிலமும் தாங்கள் வகுத்துள்ள விதிகளின் படி டிரைவிங் லைசென்ஸ், ஆர்.சி. புத்தகங்களை வழங்கி வருகின்றன.
நாள்தோறும் நாடு முழுவதும் தினமும் 32 ஆயிரம் டிரைவிங் லைசென்சுகளும், 43 ஆயிரம் வாகனங்கள் பதிவு அல்லது மறுபதிவு செய்யப்பட்டு ஆர்.சி.புத்தகம் வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் அடுத்த ஆண்டு ஜூலை முதல் ஒரே மாதிரியாக வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டிரைவிங் லைசென்சுகள் ஏ.டி.எம் கார்டு வடிவில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் நிலையில், ஆர்.சி. புத்தகமும் ஏ.டி.எம். கார்டு வடிவில் வழங்கப்பட உள்ளது. போலி கார்டுகளை தயாரிக்காமல் இருக்க ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் இந்த கார்டில் இடம்பெற்று இருக்கும்.
பாதுகாப்பான கொய் லோச் அச்சு தொழில் நுட்பம், மைக்ரோ பிரிண்டிங், மைக்ரோ கோடுகள், ஹாலோ கிராம், வாட்டர் மார்க் போன்ற தொழில்நுட்பங்கள் இதில் இடம்பெற்று இருக்கும். நீலம் கலந்த ஊதா கலரில் அச்சிடப்படும் கார்டில் மைக்ரோ சிப் இணைக்கப்பட்டு, லைசென்ஸ் விவரம் மற்றும் ஆர்.சி. புத்தகம் தொடர்பான தகவல்கள் இடம் பெறும்.
லைசென்சில் ரத்த குரூப், உடல் தானம் செய்திருந்தால் அதற்கான தகவல் உள்ளிட்ட விவரங்கள் அடங்கி இருக்கும்.
ஆர்.சி. புத்தகத்தில் வாகனம் விற்கப்பட்ட நாள், தகுதி நாள், வாகன பிரிவு, ஜேசிஸ் எண், என்ஜின் நம்பர், போன்ற விவரங்கள் இடம்பெறும்.
லைசென்சு மற்றும் ஆர்.சி. புத்தகத்தை எந்த இடத்தில் பரிசோதித்தாலும் உடனடியாக அனைத்து தகவல்களும் கிடைக்கும்.
பழைய டிரைவிங் லைசென்ஸ், ஆர்.சி. புத்தகம் வைத்திருப்பவர்கள் புதிய முறையில் புதுப்பித்து கொள்ளலாம். புதிய கார்டுகள் வழங்க கூடுதலாக 20 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் ஏடிஎம். கார்டு வடிவில் இவை இருப்பதால் எங்கு வேண்டுமானாலும் எளிதாக எடுத்து செல்ல்லாம் என்பது குறிப்பிடத்தக்கது.