மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த, பயணங்களை எளிதாக்க வாகனங்கள் பயன்படுகின்றன. அந்த வகையில் புதிய வரவாக, சென்னைவாசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ஸ்மார்ட் பைக் பற்றிய ஒரு சிறிய தொகுப்பை காணலாம்.
ஆரம்ப காலக்கட்டத்தில் பல கிலோ மீட்டர் நடந்தே இடம் பெயர்ந்த மனிதன், தனது வாழ்வில் இடம்பெயர பல யுக்திகளை கையிலெடுத்தான். விலங்குகளை சக்கர வாகனங்களில் பூட்டி இடம்பெயர தொடங்கினான். காலங்கள் மெல்ல மெல்ல ஓடத் தொடங்கின. வாகனங்களில் விலங்குகளுக்கு பதிலாக விஞ்ஞானம் பூட்டப்பட்டது. இன்றோ என்ஜின்கள் வாகனங்களை இயக்குகிறது. பயணம் செய்ய பல வாகனங்கள் இருந்தாலும், இந்த அவசர உலகில் பல புதுமைகள் மிதிவண்டிகளிலும் வரத் தொடங்கியுள்ளன. அப்படி உருவான ஒரு புதிய யுக்திதான் இந்த ஸ்மார்ட் பைக் என்னும் வாடகை மிதிவண்டிகளை எடுக்கும் திட்டம்.
இத்திட்டத்தை சென்னை மாநகராட்சியும், மிதிவண்டியைப் பகிரும் தனியார் நிறுவனமும் இணைந்து, சென்னையின் பல்வேறு இடங்களில் மக்களுக்கான சேவையை தந்து வருகின்றன. குறிப்பாக, மெட்ரோ இரயில் நிலையங்கள், மெரினா கடற்கரை மற்றும் பல இடங்களில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. அந்த ஸ்மார்ட் பைக் என்னும் சைக்கிள்கள் குறிப்பிட்ட சில இடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும். அங்கு இருந்து அந்த சைக்கிள்களை நாம் எடுத்து கொண்டு வேறு குறிப்பிட்ட ஸ்மார்ட் சைக்கிள் நிறுத்தத்தில் விட்டு விட்டு சென்று விடலாம்.
இந்த சைக்கிள் சேவையைப்பெற, ஒவ்வொருவரும் தங்களது கைப்பேசியில் பிளே ஸ்டோரில், ஸ்மார்ட் பைக் என்னும் செயலியை தரவிறக்கம் செய்து, அதில் சைக்கிளின் மீது உள்ள கியூ.ஆர் கோடை ஸ்கேன் செய்து இணையம் மூலம் அதற்கான பணத்தை கட்டி விடலாம். ஒரு மணி நேரத்திற்கு 5 ரூபாய் வீதம் கட்டணம் செலுத்த வேண்டும். மொத்தமாக சென்னையில் 5 ஆயிரம் ஸ்மார்ட் பைக்குகள் எனப்படும் மிதிவண்டிகள் செயல்பாட்டுக்கு விடப்பட்டுள்ளன. மேலும் 500 ஸ்மார்ட் பைக் நிறுத்தும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பொது மக்கள் தங்களது பயணத்தை எளிதாக்கி கொள்ள முடிகிறது என்கின்றனர்.
சென்னையின் ஒரு பாகமாக தொடங்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் பைக் திட்டம், சென்னையை மேலும் வளரச் செய்யும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை..