சிறு, குறு தொழில் அதிகவேலை வாய்ப்புகளை வழங்குகிறது: செல்லூர் ராஜு

மதுரையில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற சிறுகுறு தொழில் மாநில மாநாட்டின் நிறைவு விழாவில் அமைச்சர்கள் செல்லூர் ராஜ், சம்பத் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்றனர்.

2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்ட மாநில மாநாடு மதுரையில் நடைபெற்றது. 25ம் ஆண்டின் வெள்ளி விழா மாநாட்டில் 500 மற்றும் 2000 சதுர அடி பரப்பளவில் அடுக்குமாடு தொழிற்பேட்டைகளை உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விழாவில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ வேலை வாய்ப்பு வழங்குவதில் சிறு, குறு தொழில் துறை முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தார். வெள்ளி விழா மலரை வெளியிட்டு பேசிய அமைச்சர் எம்.சி.சம்பத், சிறு தொழில் பெருகும் பட்சத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்றும், பெருந்தொழில் வளர்ச்சி திட்டங்களை ஓராண்டில் செயல்படுத்து முழு முயற்சி எடுத்து வருவதாகவும், தொழில் முனைவோருக்கு உதவி செய்ய அரசு காத்திருப்பதாகவும் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பெஞ்சமின், 667 விண்ணப்பங்கள் மூலம் இதுவரை 607 நிறுவனங்களுக்கு தொழில் துவங்க அரசு அனுமதியளித்துள்ளதாக தெரிவித்தார். ஆயிரத்து 367 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்படும் தொழில்கள் மூலம் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சம்பத், உலக முதலீட்டாளர் மாநாட்டில் 12 ஆயிரம் சிறு குறு நிறுவனங்களுக்கு 32 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டின் மூலம் ஒன்றரை லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருப்பதாக தெரிவித்தார்.

Exit mobile version