வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியதால் பாடகி சின்மயி டப்பிங் யூனியனில் இருந்து நீக்கமா?

 

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறிய நிலையில், பாடகி சின்மயி டப்பிங் ஆர்ட்டிஸ்ட் யூனியனில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2 வருடமாக டப்பிங் யூனியனுக்கு செலுத்த வேண்டிய சந்தா தொகையை செலுத்தவில்லை எனக் கூறி சின்மயி அந்த அமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் தமிழ் திரைப்படங்களில் அவர் பின்னணி குரல் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

கவிஞர் வைரமுத்து மீது அவர் பாலியல் புகார் தெரிவித்த நிலையில், அவர் மீதான இந்த நடவடிக்கை உள்நோக்கம் கொண்டதாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஏன் சந்தா தொகை செலுத்தவில்லை என சின்மயி டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். டப்பிங் யூனியன் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், அதே நேரம் தனது சம்பளத்தில் இருந்து தொடர்ந்து 10 சதவீதம் தொகை பிடித்தம் செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கான எந்த ரசீதுகளையும் யூனியன் வழங்குவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பாடகி சின்மயி டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டதற்கு நடிகை டாப்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சின்மயிக்கு ஆதரவாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தவறுகளுக்கு எதிராக குரல் கொடுத்தால் என்ன நடக்குமோ, அது தான் சின்மயிக்கு நடந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version