விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டியில், பல முறை சாம்பியன் பட்டம் பெற்ற செரீனா வில்லியம்ஸை தோற்கடித்து, ஹாலெப், சாம்பியன் பட்டம் வென்றார். விம்பிள்டன் டென்னிஸில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி, இன்று நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸும், ருமேனியாவின் சிமோனா ஹாலெப்பும் போட்டியிட்டனர். தற்போது வரை 23 பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ள செரீனா வில்லியம்ஸ் மோதும் போட்டி என்பதால், ரசிகர்களிடையே இந்த போட்டியை காண பெருத்த ஆர்வம் காணப்பட்டது.
இந்த நிலையில் தொடங்கிய ஆட்டத்தின் தொடக்கம் முதலே சிமோனா ஹாலெப் அதிரடியாக ஆடினார். இதனால் 6 க்கு 2, 6க்கு 2 என்ற நேர் செட்களில் செரீனா வில்லியம்சை எளிதில் வென்று அமெரிக்க ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார். இதன் மூலம் விம்பிள்டன் பட்டத்தை சிமோனா ஹாலெப் முதன் முறையாக கைப்பற்றியுள்ளார்.