சென்னை ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதல் பயிற்சி: செய்தி தொகுப்பு

 

ஒலிம்பிக்கில் பதக்கம் பெறுவதே விளையாட்டு வீரர்களுக்கான ஒரே கனவாக இருக்க முடியும். சமீப காலமாக இந்தியா, துப்பாக்கி சுடும் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உலக துப்பாக்கி சுடும் போட்டியில் ஜூனியர் பிரிவில் இந்திய அணி சீனா உள்ளிட்ட நாடுகளை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தது. குறிப்பாக கடந்த 2011 ஆண்டு முதல் 2016 ம் ஆண்டு வரை தமிழகம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. தமிழகத்தில் திறமை மிக்க துப்பாக்கி சுடும் வீரர்களை உருவாக்குவதில் சென்னை ரைபிள் கிளப்பின் பங்கு மகத்தானது. இது குறித்த செய்தி தொகுப்பை இப்போது காணலாம்.

சென்னை, எழும்பூர் பழைய காவல் ஆணையரக வளாகத்திலுள்ள, சென்னை ரைபிள் கிளப் துப்பாக்கி சுடும் தளத்தில் டிஜிட்டல் முறையில் கட்டப்பட்டுள்ள நவீன துப்பாக்கி சுடும் தளம், திறந்த வெளி சுடுதளம் என இரண்டு வகை உண்டு. இதில் ஏர் பிஸ்டல், ஏர் ரைபிள், ஏர் பிப் ரைபிள் ஏன மூன்று வகையான ஆயுதப் பயிற்சி கற்றுத்தரப்படுகிறது. 1952 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை ரைபிள் கிளப் துப்பாக்கி சுடும் தளத்தில் ஏராளமானோர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதன் தலைவராக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் செயல்பட்டு வருகிறார். இங்கு ஐ ஏ எஸ் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள் உறுப்பினர்களாக உள்ளனர். நடிகர்கள் அஜித்குமார், சூர்யா, கார்த்திக், சரத்குமார் உள்ளிட்டோரும் இங்கு பயிற்சி பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இந்த பயிற்சி தளத்தில் மாணவர்களை அதிகம் பங்கேற்க வைக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பிரத்தியேகப் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களைக் கொண்டு துப்பாக்கி சுடும் பயிற்சி கற்று தரப்படுகிறது.

ஆறுமாதம் முதல் 1 ஆண்டு வரை துப்பாக்கிசுடும் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் 34 பேர் பயிற்சி பெறக்கூடிய குளிர்சாதன வசதியோடு கூடிய அறையும் உண்டு. காலை மாலை இரண்டு நேரங்களிலும் பயிற்சி பெறலாம்.

இங்கு பயிற்சி பெற வரும் மாணவர்கள் பல்வேறு கனவுகளோடும் எதிர்கால திட்டத்தோடும் வருகிறார்கள். 6-ம் வகுப்பு படிக்கும் மாணவி அக்ஷதா, ஐஎஃப்எஸ் ஆக வேண்டும் என்ற விருப்பத்துடன் இங்கு துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வருகிறார்.

சென்னை ரைபிள் கிளப் பெரியவர்களுக்கு மட்டுமில்லாமல் சிறியவர்களுக்கும் துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்து வருகிறது. இங்கு பயிற்சி பெறுபவர்கள் விரைவில் ஒலிம்பிக்கில் சாதிப்பார்கள் என நம்பலாம்.

Exit mobile version