கடல் நீர்மட்டம் 50 செ.மீ. உயர்ந்தால் பாதிக்கப்படும் நகரங்கள்

இந்தியாவில் சென்னை உள்ளிட்ட 4 துறைமுக நகரங்கள் விரைவில் கடலில் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாக ஐநா சபையின் ஆய்வறிக்கை கூறுகின்றது. தமிழகத்தின் தலைநகரம் எதிர்கொள்ள உள்ள அபாயம் என்ன?

சமீப காலங்களில் புவி வெப்பமயமாதல் பெரிதும் அதிகரித்து உள்ளது. இதனால் இமயமலையில் உள்ள பனிக் கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. இவற்றின் தொடர் விளைவால் கடலின் நீர்மட்டமும் வரலாறு காணாத வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதே வேகத்தில் கடலின் நீர்மட்டம் உயர்வது தொடர்ந்தால் வரும் 2100 ஆம் ஆண்டில் இப்போது உள்ள நீர்மட்டத்தை விடவும் கடலின் நீர்மட்டம் 1 மீட்டருக்கும் மேல் அதிகரிக்கும்.

இந்தியாவில் உள்ள 45 துறைமுக நகரங்களில் சென்னை, மும்பை, கொல்கத்தா, சூரத் – ஆகிய 4 நகரங்களின் உயரங்கள் கடல் மட்டத்தின் உயரத்திற்கு மிக அருகில் உள்ளன. இதனால் கடல்மட்டம் மேலும் 50 சென்டிமீட்டர் உயர்ந்தால் கூட இந்த நகரங்கள் கடலில் மூழ்கும் அபாரம் ஏற்படும். எனவே இவை விரைவில் கடலில் மூழ்கவே அதிக வாய்ப்புகள் உள்ளன. இது குறித்த தகவலை நேற்று ஐக்கிய நாடுகள் அவையின் சுற்றுச் சூழல் அமைப்பு தெரிவித்து உள்ளது.

புவியின் வெப்பமயமாதலுக்கு காற்றில் கலக்கும் கார்பன் துகள்களே முக்கியக் காரணமாக உள்ளன. ஒரு வேளை இந்தக் கார்பனின் அளவு கட்டுப்படுத்தப்பட்டு, புவியின் வெப்பமும் 2 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குறைக்கப்பட்டால்கூட கடல்நீர் மட்டம் உயர்வதை நம்மால் முழுதும் தடுத்துவிட முடியாது. ஆனால் அப்போது, கடல்நீர்மட்ட உயர்வை 30 சென்டி மீட்டர் முதல் 60 சென்டி மீட்டர் வரையிலான அளவுக்குள் நம்மால் கட்டுப்படுத்த முடியும்.

ஒரு வேளை காற்றில் கலக்கும் கார்பனின் அளவை நாம் கட்டுப்படுத்தத் தவறினாலோ கடல்நீர் மட்டம் 60 சென்டி மீட்டர் முதல் 110 சென்டி மீட்டர் வரையில் கட்டாயம் உயர்ந்து பேரழிவுகளை ஏற்படுத்தும்.

இப்படியாகக் கடல்மட்டம் உயர்வதால் இந்தியா போன்ற வளரும் நாடுகளைத் தவிர, அமெரிக்க போன்ற வல்லரசு நாடுகளும் பாதிக்கப்படும். அமெரிக்காவின் தலைநகரான நியூயார்க்கும் சென்னை மூழ்கும் போது அத்துடன் மூழ்கும் என்பது இதற்கான ஒரு உதாரணம். எதிர்காலத்தில் கடல் நீர்மட்டம் உயரும் போது உலகெங்கும் உள்ள 140 கோடி மக்கள் கடும் பாதிப்புகளை சந்திப்பார்கள்.

புவி வெப்பமயமாதலால் உலகெங்கும் உள்ள பனிக் கட்டிகள் வேகமாக உருகுவதும், புயல்கள் மழைகள் அடிக்கடி தோன்றுவதும் பல விதங்களில் புவியை பாதித்து வருகின்றன. முன்பெல்லாம் கடல்மட்டம் உயர்வது என்பது நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வாக இருந்தது. இப்போது ஒவ்வொரு ஆண்டும் கடல்மட்டம் உயர்ந்து வருகின்றது. இன்னொருபக்கம் அமிலமழையால் கடல் நீரில் வாழும் உயிரினங்களும்
கடும் உணவுத் தட்டுப்பாட்டை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன – இவ்வாறு மொனாகோ நாட்டில் வெளியிடப்பட்ட ஐநாவின் ஐ.பி.சி.சி. ஆய்வறிக்கை உலகெங்கும் உள்ள மக்களை எச்சரித்து உள்ளது.

Exit mobile version