“கூட்டுறவு சங்கங்களில் தற்போதைய நிலையே தொடர வேண்டும்"

கூட்டுறவு சங்கங்களில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 9ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் தற்போதைய நிர்வாகத்தை கலைத்து புதிதாக தேர்தல் நடத்துவது குறித்து அரசு கொள்கை முடிவு எடுக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். பதவி காலம் முடியும் முன்பு கூட்டுறவு சங்கங்களில் புதிதாக தேர்தல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருச்சி மாவட்டம், அன்பில் பகுதி கூட்டுறவு சங்க தலைவர் அருண் நேரு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அதில், கூட்டுறவு சங்கத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் 2023ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில் அவர்கள் பணி செய்வதற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு குறித்து கூட்டுறவு துறை செயலர் பதில் மனு தாக்கல் செய்யவும், அதுவரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், வழக்கு விசாரணையை ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Exit mobile version