சேலம் அருகே தாழ்த்தப்பட்ட பெண் சமையல் செய்ய எதிர்ப்பு –  6 பேர் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு 

சேலம் அருகே அரசுப் பள்ளியில் தாழ்த்தப்பட்ட பெண் சமையல் செய்ய எதிர்ப்பு தெரிவித்த, 6 பேர் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காடையாம்பட்டி அருகே குப்பன்கொட்டாய் அரசு துவக்கப் பள்ளிக்கு சமையலராக நியமிக்கப்பட்டவர் ஜோதி. இங்கு 48 மாணவ, மாணவிகள் படித்து வரும் நிலையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஜோதி சமைத்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என பெற்றோர் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டதாக கூறப்படுகிறது.

ஜோதி சமையலர் பணியில் தொடர்ந்தால் தங்கள் பிள்ளைகளை வேறு பள்ளிகளில் சேர்க்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சமையலர் ஜோதி கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 6 பேர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக தேவன், சின்னத்தம்பி, மகேந்திரன் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள தலைமையாசிரியர் சேகர் உள்ளிட்ட 3 பேரை காவலர்கள் தேடி வருகின்றனர். தலைமை ஆசிரியரின் தூண்டுதலின் பேரில், சமையலர் ஜோதியை மாற்றக்கோரி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Exit mobile version