திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தை அடுத்துள்ள தென்கலம் பகுதியை பூர்விகமாக கொண்ட டி. செல்வராஜ், மதுரை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார். கடந்த பல ஆண்டுகளாக திண்டுக்கல்லில் வசித்து வந்தார். தோல், மலரும் சருகும், தேனீர், மூலதனம் உள்ளிட்ட நாவல்களையும், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 70க்கும் மேற்பட்ட ஓரங்க நாடகங்களையும் இவர் எழுதியுள்ளார்.
திண்டுக்கல் பகுதியிலுள்ள தோல் பதனிடும் தொழிலாளர்கள் குறித்து டி.செல்வராஜ் எழுதிய தோல் நாவல், கடந்த 2012-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரான டி. செல்வராஜ், பல்வேறு இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்று வந்தார். கடந்த சில நாள்களாக உடல் நலக் குறைவு காரணமாக மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சைப் பலனின்றி காலமானார். மறைந்த எழுத்தாளர் செல்வராஜின் உடல், திண்டுக்கல்லில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு திண்டுக்கல் மின்மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.