சபரிமலைக்கு இளம்பெண்களை அனுமதிக்க கேரள அரசு முடிவு – உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த உள்ளதாக அறிவிப்பு

சபரிமலை கோயில் நடை வெள்ளிக்கிழமை திறக்கப்பட உள்ள நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது.

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, சபரிமலை கோயிலுக்கு செல்ல 594 பெண்கள் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற கால அவசாகம் கோருமாறு எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சி கோரிக்கை விடுத்தது.

இதற்கு ஆளும் கட்சி எதிர்ப்பு தெரிவித்ததால் பாஜகவும், காங்கிரசும் வெளிநடப்பு செய்தன. இதைத்தொடர்ந்து, சபரிமலை விவகாரத்தில் ஒருமித்த கருத்தை எட்ட முடியாமல் அனைத்து கட்சி கூட்டம் தோல்வியில் முடிந்தது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், சபரிமலை ஐயப்பன் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பான அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதில் கேரள அரசு முனைப்பாக உள்ளதாக தெரிவித்தார். இதற்கு அனைத்து எதிர்கட்சிகளும் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Exit mobile version