கார்த்திகை முதல் நாளான இன்று ஐயப்ப பக்தர்களின் விரதம் தொடங்கியது

கார்த்திகை மாதம் பிறந்ததை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்காக மாலை அணிந்து விரதத்தை துவங்கினர்.

ஐயப்பனுக்கு மாலை போடும் பக்தர்கள், கார்த்திகை ஒன்றாம் தேதி ஆரம்பித்து, தை மாதம் ஒன்றாம் தேதி மகர ஜோதி தரிசனத்தை காணும் வரை கடுமையான விரதம் கடைபிடிப்பார்கள். அதன்படி, கார்த்திகை மாதம் முதல் நாளான இன்று, ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் அதிகாலை முதலே குவிந்த ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். இதேப்போல் தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை ஆரம்பித்தனர்.

மேலும்  கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஏராளமான பக்தர்கள் அருவியில் புனித நீராடி குற்றால நாதர் கோயில் மற்றும் விநாயகர் கோயிலில் குருசாமி தலைமையில் மாலை அணிந்து விரதத்தை துவங்கினர். இது தவிர வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் சபரிமலை செல்லும் வழியில் குற்றாலத்திற்கு வந்து நீராடிச் சென்றனர். நேற்று இரவு பெய்த மழை காரணமாக குற்றாலம் மெயினருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 

Exit mobile version