ரூ.914 கோடி மதிப்பில் ஊரக புத்தாக்க திட்டங்கள்: முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னையில் இன்று நடைபெறும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 914 கோடி மதிப்பிலான ஊரக புத்தாக்க திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

நகராட்சி நிர்வாகம், மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 550 கோடி ரூபாய் மதிப்பிலான முடிக்கப்பட்ட திட்டங்களை சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார். மேலும் 112 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து கிராமப் புறங்களில் தொழில் மேம்பாடு, நிதி சேவை மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 914 கோடி ரூபாய் மதிப்பிலான தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டங்களை உலக வங்கி நிதியுதவியுடன் 26 மாவட்டங்களில் உள்ள 120 வட்டாரங்களில் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். இதனையடுத்து, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 150 கோடி ரூபாய் கடனுதவியும் வழங்கவுள்ளார்.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகையும், 100 சதவீத தேர்ச்சி பெற உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் ஊக்கத்தொகை வழங்கிறார்.

Exit mobile version