சென்னையில் நடைபெற்ற ரோபோட் கண்காட்சி தங்களை வியப்பில் ஆழ்த்தியதுடன் சிந்தனை திறனை மேம்படுத்தும்விதமாக அமைந்திருந்ததாக பள்ளி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை சாந்தோம் பள்ளியில் எஸ்.பி ரோபோட்டிக்ஸ் மேக்கர் லேப் சார்பில் ரோபோட் கண்காட்சி நடைபெற்றது. மாணவர்களின் அறிவு திறனை மேம்படுத்தும் வகையில் ரோபோட்டிக்ஸ் கல்வியை பயிற்றுவிப்பதாக எஸ்.பி.ரோபோட்டிக்ஸ் மேக்கர் லேபின் துணை நிறுவனர் சினேகா பிரியா தெரிவித்துள்ளார்.
கண்காட்சியில் இடம் பெற்றிருந்த ரோபோக்கள் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக மாணவர்கள் மற்றும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
10 தொழில் சார் ரோபோட்களும், மாணவர்களால் உருவாக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட ரோபோக்களும் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக விவசாயத்திற்கு பயன்படக் கூடிய ரோபோ, மனிதர்களின் அசைவுகளை பிரதிபலிக்கும் ரோபோக்கள் காண்போரை கவர்ந்தன.