ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா

மத்திய அரசுடனான மோதல் அதிகரித்ததை தொடர்ந்து, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு, ஒத்துழைக்க மறுத்து, அப்போதைய ஆளுநர் ரகுராம் ராஜன் பதவி விலகியதை தொடர்ந்து, உர்ஜித் படேல், ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தை சேர்ந்த படேல், மோடியின் அரசின் நிதிக் கொள்கைக்கு ஆதரவாக இருப்பார் என கருத்தப்பட்டது. ஆனால், அண்மைக் காலமாக, ரிசர்வ் வங்கியில், மத்திய அரசின் தலையீடு, அதிகரித்து வருவதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.

அதனை நிரூபிப்பது போல், ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தில் மத்திய அரசு தலையீடக் கூடாது எனக் கூறிய உர்ஜித் படேல், நிதிக் கொள்கை என்பது ரிசர்வ் வங்கிக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.

இந்த புகைச்சலுக்கிடையே, ரிசர்வ் வங்கியிடம் சுமார் ஒன்பதரை லட்சம் கோடி ரூபாய் உபரி நிதி இருப்பதாகவும், அதிலிருந்து முன்றரை லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசின் திட்டங்களுக்கு ஒதுக்க வேண்டும் எனவும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி வலியுறுத்தினார்.

இதற்கு, உர்ஜித் படேல் மற்றும் ரிசர்வ் வங்கி இயக்குனர்களில் பெரும்பாலானோர் மறுப்பு தெரிவித்தனர். இதன் மூலம், மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையேயான மோதல் வெட்ட வெளிச்சமானது.

பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உர்ஜித் படேல், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் மற்றும் நிதிக் கொள்கை பற்றி எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன் போன்ற பொருளாதார நிபுணர்கள் விமர்சித்து வரும் நிலையில், உர்ஜித் படேலின் ராஜினாமா, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அவரது இந்த முடிவு பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Exit mobile version