கர்நாடகம், குஜராத் ஆகிய மாநிலங்களில் பலத்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் மீட்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
கர்நாடகத்தின் மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்துவருவதால் துங்கபத்திரை ஆற்றில் வெள்ளம் கரைமீறிப் பாய்கிறது. இதனால் சிவமோகா நகரில் ஆற்றங்கரையோரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் பாதுகாப்பான வேறிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும்,குஜராத் மாநிலத்தின் கட்ச், சவுராஷ்டிரா பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றிரவு மட்டும் 18 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்வதால் கரையோரங்களில் உள்ள ஊர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கித் தவித்த ஐந்நூற்றுக்கு மேற்பட்டோரைத் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.