இந்தியா மற்றும் தமிழகத்தில் வேதகணித முறையை அமல்படுத்த சீனாவின் சிறந்த வெளிநாட்டு ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தென் அமெரிக்க பல்கலைகழகத்தில் கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஈரோடு மாவட்டம் கிருஷ்ணாம்பாளையத்தை சேர்ந்த ஐசக் தேவக்குமார் கடந்த 2015-ம் ஆண்டுமுதல் சீனாவின் அரசு பள்ளியில் முதுநிலை கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இந்தியா வந்துள்ள தேவகுமார், ஈரோட்டின் குருவரெட்டியூரில் தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவர்களுக்கு வேத கணித முறையில் கணித பாடம் நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேத கணித முறையை தமிழகம் மற்றும் இந்திய அரசு, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அமல்படுத்தி மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த கோரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவில் உள்ள மாணவர்களுக்கு இந்தியாவின் பாரம்பரிய முறையான வேத கணிதம் முறையில் கணித பாடத்தை நடத்தி வருகிறார். ஐசக் தேவகுமாரின் இந்த முயற்சியால், சீனாவின் கடைநிலை மாணவர்களும் கணிதத்தில் அதிக மதிப்பெண்கள் எடுத்து வருகின்றனர். இதையடுத்து கடந்த 2016 மற்றும் 17-ம் ஆண்டிற்கான சிறந்த வெளிநாட்டு ஆசிரியருக்கான விருதை இவருக்கு வழங்கி சீன அரசு கவுரவித்துள்ளது.