தமிழ்நாட்டில் தடுப்பூசி இருப்பு குறித்து சரியான தகவல் வெளியிட மறுப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

மத்திய அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசி தொகுப்புகளை, உரிய நேரத்தில் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்புவதில், தமிழக மெத்தனமாக செயல்படுவதால், பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் தடுப்பூசி கிடைக்காமல் அல்லல்படுகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில், 10 நாட்களுக்குப் பிறகு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஒசூர் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான டோக்கன்களை பெற்றுக்கொள்ள, அதிகாலை 4 மணி முதலே ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

500 டோக்கன் மட்டுமே விநியோகிக்கப்படும் என்று அறிவித்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் கூடியதால், சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.

இருப்பினும், 500 டோக்கன்கள் மட்டும் விநியோகிக்கப்பட்டதால், பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், 11 நாட்களுக்குப் பின்பு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், 3 வார்டுகளை சேர்ந்த மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால், குறிப்பிட்ட ஒரு சில வார்டு பொதுமக்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டதால், மற்ற வார்டுகளை சேர்ந்தவர்கள் தடுப்பூசி முகாமை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தடுப்பூசிக்காக முகாம்களை தேடி வருவோருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

கோவை மாநகராட்சி துடியலூரில், சில நாட்களுக்கு பிறகு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று துவங்கிய நிலையில், தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏராளமானோர் அதிகாலையிலேயே கூடினர்.

இதனால், ஆதார் அட்டை ஜெராக்ஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று முகாம் அதிகாரிகள் அறிவித்தனர்.

அடையாள அட்டை கொண்டு வந்தும் ஜெராக்ஸ் இல்லாத பலர் தடுத்து நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் அவதியடைந்தனர்.

சேலம் மாநகராட்சியில், 8 நாட்களுக்குப் பிறகு தடுப்பூசி போடும் பணிகள் துவங்கிய நிலையில், அனைத்து தடுப்பூசி முகாம்களிலும் வழக்கத்தை விட இரண்டு மடங்கு கூட்டம் காணப்பட்டது.

சேலத்துக்கு, 22 ஆயிரத்து 640 தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டதை அடுத்து, தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று துவங்கியது.

இதனால், அனைத்து முகாம்களிலும் பொதுமக்கள் காலை முதல் காத்திருக்க துவங்கினர். வழக்கத்தை விட 2 மடங்கு கூட்டம் கூடியதால், மொத்த இருப்பும் இன்றே காலியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 நாட்களுக்கு பின்னர் தடுப்பூசி முகாம்கள் திறக்கப்பட்ட நிலையில், பற்றாக்குறை காரணமாக, சிலருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நாகர்கோவில், குழித்துறை உட்பட, மாவட்டம் முழுவதும் 19 முகாம்களில் கோவிஷீல்டு இரண்டாம் டோஸ் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால், ஏராளமான பொதுமக்கள் தடுப்பூசி முகாம்களில் கூடிய நிலையில், அதிகபட்சம் 200 நபர்களுக்கு மட்டுமே டோக்கன்கள் வழங்கப்பட்டது.

தடுப்பூசி இருப்பு குறித்து தகவல் வெளியிட மறுப்பதால், ஏராளமானோர் காத்திருக்கும் நிலை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

 

Exit mobile version