12 நாட்களாக ஓசூர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோதண்டராமர் சிலை பல்வேறு தடைகளை கடந்து கர்நாடக மாநிலத்தை சென்றடைந்தது.
பெங்களூரு நகரிலுள்ள ஈ.ஜி.புரா என்ற பகுதியில் நிறுவப்படுவதற்காக 158 அடி உயரம் கொண்ட பிரமாண்ட கோதண்ட ராமர் சிலை, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கொரக்கோட்டையில் செதுக்கப்பட்டது.கொரக்கோட்டை மலையில் இருந்து 350 டன் எடை, 64 அடி உயரம், 26 அடி அகலம் கொண்ட கல் வெட்டி எடுக்கப்பட்டு கோதண்ட ராமர் சிலையின், முகம், கைகள் செதுக்கப்பட்டன. இதையடுத்து, கோதண்டராமர் சிலை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 240 டயர்கள் கொண்ட பிரமாண்ட சரக்கு லாரியில் ஏற்றப்பட்டு பெங்களூருவுக்கு புறப்பட்டது. பிரமாண்டமான இந்த சிலை செல்ல பல்வேறு இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஒருசில இடங்களில் கடைகள், குடியிருப்புகளை இடிக்க வேண்டிய சூழலும் உருவானது. இதனால் ஆங்காங்கு நிறுத்தப்பட்ட கோதண்ட ராமர் சிலைக்கு பக்தர்கள் பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.இந்தநிலையில், கோதண்ட ராமர் சிலை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பேரண்டப்பள்ளி என்னுமிடத்தில் கடந்த 12 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தற்காலிக மண்சாலை அமைக்கப்பட்டு, அந்த வழியாக கோதண்டராமர் சிலை நேற்றிரவு கொண்டு செல்லப்பட்டது. போக்குவரத்து இடையூறின்றி இரவோடு இரவாக ஓசூர் வழியாக பயணித்த கோதண்டராமர் சிலை கர்நாடக மாநிலத்தை சென்றடைந்தது. இதனால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.